முக்கிய செய்திகள்

பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      இந்தியா
pm-modi-car-2022-01-06

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான இந்தக் குழுவில் பஞ்சாப் மற்றும் அரியானா  உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி,சண்டிகர் டிஜிபி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் பெரோஸ்பூரில் வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். பெரோஸ்பூர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி சாலை வழியாக காரில் சென்றார். ஆனால், வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் மோடி பயணித்த கார் நிறுத்தப்பட்டது. வாகன அணிவகுப்பும் தொடர முடியவில்லை. 

20 நிமிடங்கள் காத்திருந்தும் மறியல் தொடந்து நீடித்ததால் பிரதமர் மோடி தனது பயணத்தை பாதியில் ரத்து செய்து அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சிகளும் ரத்தாகின. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பஞ்சாப் அரசு, மத்திய அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பிரதமர் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் மணிந்தர் சிங் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரிய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்த பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டிற்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்டு தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் அந்த குழுவில், சண்டிகர் டிஜிபி , தேசிய புலனாய்வு முகமையின் ஐஜி , பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் மற்றும் பஞ்சாப் ஏடிஜிபி  ஆகியோர் இடம்பெறுவர் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நேற்று அமைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது எப்படி? அதற்கான காரணங்கள் என்ன? இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு யார் பொறுப்பு? மிகவும் முக்கியமான நபர்களின் பயணத்தின் போது இது போன்ற பாதுகாப்பு குறைபாடு சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணை அமைப்பில் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குனர், பஞ்சாப் ஏடிஜிபி, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மத்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசு அமைத்துள்ள விசாரணைக்குழுக்கள் தற்காலிகமாக தங்கள் விசாரணையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த குழு தங்கள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மத்திய, மாநில அரசுகள் தங்கள் விசாரணையை தொடங்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து