முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19 வயதுக்குட்பட்டவருக்கான 14-வது ஐ.சி.சி. உலககோப்பை போட்டி இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஆண்டிகுவா: 19 வயதுக்குட்பட்டவருக்கான 14-வது ஐ.சி.சி. உலககோப்பை போட்டி மே.இ.தீவுகளில் இன்று தொடங்குகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி இதுவரை 13 முறை நடந்துள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இன்று துவக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.

ஐ.சி.சி. அறிமுகம்...

19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 1988-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக 2020-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் வங்காளதேசம் சாம்பியன் பட்டம் பெற்றது.

13 முறை போட்டி...

இதுவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி 13 முறை நடந்துள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியா 3 தடவையும், பாகிஸ்தான் 2 தடவையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றின.

இன்று தொடக்கம்...

14-வது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 5-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காள தேசம் உள்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

‘பி’பிரிவில் இந்தியா... 

இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய நாடுகள் அந்த பிரிவில் இடம் பெற்று உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. அயர்லாந்துடன் 19-ந் தேதியும், உகாண்டாவுடன் 22-ந் தேதியும் மோதுகிறது.

துவக்க ஆட்டம்...இன்று நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் இந்த போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து-இலங்கை (குரூப் ‘டி’) அணிகள் மோதுகின்றன. ஆண்டிகுவா, கயானா, செயின்கிட்ஸ், டிரினிடாட் ஆகிய 4 இடங்களில் போட்டி நடக்கிறது. பிப்ரவரி 5-ந் தேதி இறுதிப்போட்டி ஆண்டிகுவாவில் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!