முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். 

அரசிதழில் வெளியீடு...

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டது. இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணிகள் கடந்த வாரம் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இது பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அரசிதழிலும் வெளியிட்டது.

பெண்களுக்கு ஒதுக்கீடு...

இதன்படி இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளும் வரையறை செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இட ஒதுக்கீடுபடி பிரிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் ஆதி திராவிடர் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

5 கட்ட ஆலோசனை... 

கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சி மேயர் பதவிகள் பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இட ஒதுக்கீடுபடி வார்டுகள் முழுமையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடனும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஏற்கனவே 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் கெடு...

தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளை அமைத்தல், மின்னணு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது, பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்டறிதல், அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 31-ம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ விதித்துள்ள நிலையில் ‘கொரோனா’ பரவல் காரணமாக தேர்தல் பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி 12 அல்லது 13-ம் தேதிகளில் நடத்தலாமா? என்று மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

11 கட்சி பிரதிநிதிகள்...

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தையும் கேட்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தி.மு.க. அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க., பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்னர்.

அனைத்துக் கட்சிகளுடன்...

தி.மு.க சார்பில் கிரிராஜன், சுந்தர். அ.தி.மு.க சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல். பாஜக சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (ஜன.21) விசாரணைக்கு வர உள்ளது.

ஒரே கட்டமாக...

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையருடனான ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியாக தெரிகிறது. மேலும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் பிரதிநிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும், தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

நாளை அறிவிப்பு ?

அநேகமாக வருகிற 21 அல்லது 22-ம் (நாளை அல்லது நாளை மறுநாள்) தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 அல்லது 13-ம் தேதிகளில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து