முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு கொள்முதலில் முறைகேடா? எடப்பாடிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு கூறிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார். 

இது குறித்து அமைச்சர் சக்கரபாணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் என்றும் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.  2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுகிய காலத்தில் 21 வகையான பொருள்கள் தரமாக வழங்க வேண்டும் என்பதற்காக உரிய முறையில் விலைப்புள்ளி கோரப்பட்டு குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாது, கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதியன்று நானும், கூட்டுறவுத்துறை அமைச்சர், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் காணொலி வாயிலாக கலெக்டர்கள், மண்டல இணைப் பதிவாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கூட்டத்தை நடத்தி அனைவருக்கும் தரமான பொருள்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். நான் கடந்த 11-ம் தேதியன்றே பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதே சில இடங்களில் வேண்டுமென்றே அ.தி.மு.க. வினர் பொய்ப் பிரச்சாரம் செய்ததை ஆதாரத்துடன் சுட்டிக் காண்பித்தேன். அது மட்டுமல்லாது, முதல்வரே, சென்னையில் பொதுவிநியோகத் திட்ட அங்காடிகளுக்கு  சென்று பொருள்களின் தரத்தையும் விநியோகத்தையும் ஆய்வு செய்தார்.  சில இடங்களில் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதை மாற்றிக் கொடுத்ததோடு அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.  

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் கடந்த பொங்கலுக்கு  45 கிராம் பொருள்களுக்கு அவர்கள் வழங்கிய தொகை ரூ. 45/-  ஆனால் இந்த பொங்கலுக்கு எங்கள் ஆட்சியில் 50 கிராம் முந்திரி பருப்பு, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் ஆகிய 110 கிராம் பொருள்களுக்கு வழங்கிய தொகை ரூ. 62 ஆகும். 

கடந்த ஆட்சியின் இறுதியில் பருப்புக்கு கிலோ ஒன்றிற்கு ரூ.120.50 என்ற விலையில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்துவிட்டு, நாங்கள் கிலோ ரூ.78 முதல் ரூ.86 வரையிலான விலையில் இறுதி செய்து பருப்பு கொள்முதல் செய்தோம்.  தி.மு கழக ஆட்சியில் வெளிப்படையான நடைமுறை கொண்டு வரப்பட்டதால், இதில் மட்டும் ஒரு மாதத்திற்கே ஒரு கொள்முதலில் ரூ.74.75 கோடி எங்கள் அரசால் மீதப்படுத்தப்பட்டுள்ளது.  மேற்குறிப்பிட்ட இரண்டு கொள்முதல்களில் மட்டும் இரண்டு மாதத்திற்கே ஒரு துறையில் மட்டுமே இவ்வளவு பணத்தை நாங்கள் மீதப்படுத்தி இருக்கிறோம் 

இந்த நிலையில் அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் பற்றி என்னுடன் விவாதிக்கத் தயாராயுள்ளாரா?  இல்லாவிடில் இவர் தனது தவறான குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.  இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து