முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 28

Source: provided

சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பாக தலா ரூ. 10 லட்சம் ரூபாய் வழங்கவும்,  தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.5.2022 அன்று திடீரென மிகப் பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இவ்விபத்தில் அரியகுளம் கிராமம், ஆயர்குளத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் முருகன் (வயது 23) மற்றும் நான்குநேரி, இளையார்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்து விட்டனர் என்ற வேதனையான செய்தி தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இது தவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!