முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தவிருந்த பிட் பேப்பர்கள் கொல்லிமலை ஜெராக்ஸ் கடையில் கண்டுபிடிப்பு : அரசு தேர்வுகள் பறக்கும்படையினர் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Namakkal 2022-05-17

Source: provided

நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள் பறக்கும் படை குழு அவற்றை பறிமுதல் செய்தது.

நாமக்கல் மாவட்டத்தில் 200 மையங்களில் பிளஸ் 2 தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே போல் பிளஸ் 1 தேர்வு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொல்லிமலை வாழவந்தி நாடு ஜி.டி.ஆர். உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அரசு தேர்வுகள் இணை இயக்குனர்( மேல்நிலைக் கல்வி) பொன்.குமார் நேற்று முன்தினம் கொல்லிமலைக்கு ஆய்வு பணிக்காக சென்றார். அப்போது வாழவந்தி நாட்டிலுள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்திருந்தனர்.

அவர் அங்கு சென்று பார்த்த போது மைக்ரோ பிட் என்னும் சிறிய வகையில் பாடப் புத்தகத்தில் இருந்து ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். உடனடியாக கடையில் இருந்த அவற்றை பறிமுதல் செய்த இணை இயக்குனர் ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், மாணவ மாணவிகளிடம் இருந்து சுமார் அரை கிலோ எடை அளவில் ஜெராக்ஸ் பிட்டுகளை அவர் பறிமுதல் செய்தார். மாணவர்களின் நலன் கருதி இன்று காலை 9.30 மணியளவில் அனைத்து தேர்வு மையங்களிலும் முன்னதாகவே மாணவர்களிடம் இருந்து பிட் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

கொல்லிமலை மட்டுமன்றி குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளிலும் ஜெராக்ஸ் கடை களில் பொதுத்தேர்வுக்கான பிட் தயாரித்து கொடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசுத் தேர்வுகள் பறக்கும் படையினர் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக மையங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!