முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவு நீரகற்று பணியின் போது விபத்து: ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2022 01 07

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய  ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரின் குடும்பத்தினருக்கு  நிவாரணத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 28.06.2022 அன்று காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ஒப்பந்தத் தொழிலாளர் நெல்சன் என்கிற கட்டாரி (வயது - சுமார் 26), இயந்திர துளையில் ஏதேனும் கல்/துணி அடைக்கப்பட்டிருக்கிறதா என்று சாலையில் நின்று கவனித்த போது, இயந்திர துளையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமார் (வயது - சுமார் 35) என்பவரும் இயந்திர துளையில் விழுந்து விட்டார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் ஒப்பந்தத் தொழிலாளர், நெல்சன் என்கிற கட்டாரி என்பவர் சிகிச்சை பலனின்றி 28.06.2022 அன்று இறந்து விட்டார். உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்கிற கட்டாரி அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடாக   07.06.2022 நாளிட்ட நகர் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்.83-ன்படி ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமார் சிகிச்சை பலனின்றி  30.06.2022 அன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரது குடும்பத்தினருக்கு இழப்பீடாக 07.06.2022 தேதியிட்ட நகர் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்.83-ன்படி ரூ.15 லட்சம் வழங்கப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!