முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
Chakrabani 2022-07-05

Source: provided

சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். 

உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக நேற்று டெல்லியில் நடைபெற்ற  மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர்  சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது, 

தமிழக அரசு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. 01.11.2016 முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையினைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. 

அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழக மக்களுக்குச் சத்தான உணவுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு சிறப்பு பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ துவரம் பருப்பு,ஒரு கிலோ ஆட்டா மாவு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை மானியம் அதிகம் கொடுத்து குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. 

மேலும், பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவு திட்டத்தின் கீழ் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் 1989-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2010-ம் ஆண்டில் வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு முட்டை வழங்கும்  வகையில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது.  

இதுமட்டுமில்லாமல், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருள்களும் ரூ. 4000/- ரொக்கத் தொகையும்  2021 ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கியதோடு  2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகையான ஊட்டச்சத்துள்ள  உணவுப் பொருள்களையும் வழங்கியது.

தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98 சதவீதம்  கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுகிறது. இதனால் உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. மேலும் தமிழக முதல்வர்,  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தைச் சமீபத்தில்  அறிமுகப் படுத்தியுள்ளார்.  

நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட பல்முனை வறுமைக்குறியீடு அறிக்கையில் தமிழக மக்கள் தொகையில் 4.98 சதவீதம் மட்டுமே ஏழ்மையில் உள்ளனர் என்றும் ஆனால் இந்தியா முழுமைக்கும் 25.01 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.  பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருப்பது இச்சாதனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினின்  வழிகாட்டுதலில் ஒன்றிய அரசுடனும், இதர மாநில அரசுகளுடனும் ஒன்றிணைந்து நம் நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட உறுதுணை புரிவோம் என்று நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!