முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      தமிழகம்
CM-1 2022--10-05

Source: provided

சென்னை : தி.மு.க. அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என்று சென்னையில் நடந்த வள்ளலார் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.  

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது,

பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த திராவிட மாடல் அரசு, வள்ளலாரின் பிறந்த நாளை, தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்து இருக்கிறது. 

திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது, திராவிட மாடல் ஆட்சியானது மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்துப் பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள். ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல தி.மு.க.. ஆன்மீகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்திற்கும், உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறோம். இதனை அமைப்பதற்கான பெருந்திட்ட வரைவுத் திட்டம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கிறது. 

ஒரு கொள்கையை உருவாக்கிச் சொல்லி விட்டு, அதை விட்டுவிட்டு போகாமல், அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியவர் வள்ளலார்.  அவர் வழியில் நடக்கக்கூடிய இந்த அரசானது,

காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. சோறு போடுவது,  அன்னதானம் வழங்குவது மட்டுமே அவரது அறநெறி அல்ல. சாதி, மத வேறுபாடுகளற்ற சமநிலைச் சமூகம் அமைக்கப் பாடுபடுவதுதான் வள்ளலாருடைய வழியில் நடப்பது.  அத்தகைய அறநெறி உலகத்தைப் படைக்க உறுதியேற்போம். அதற்காக உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து