முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை மாதம் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022 09 09

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். கார்த்திகை மாதம் நேற்று பிறந்ததை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1-ம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். அவர்கள் ஒரு மண்டலம் முதல் 60 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு சிறப்புபூஜைகள் நடத்துவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். 

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான நேற்று தொடங்கியது. இவ்விழா நேற்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27-ம் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும். இதில் பங்கேற்க செல்லும் பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதத்தை  தொடங்கினர். 

கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் சங்கிலி துறையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் சங்கிலி துறையில் உள்ள 16 கால் மண்டபத்தில் குருசாமிகள் முன்னிலையில் மாலை அணிந்தனர். இதுபோல ஏராளமான கன்னிசாமிகளும் நேற்று  மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பின்னர் அவர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இது போல சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில்,  சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், கோடம்பாக்கம், கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோவில்களிலும் நேற்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள் திரண்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.  அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர். 

இதே போல் கோவை மாவட்டம் சித்தாபுரியில் உள்ள ஐயப்பன் கோவில் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்,  நெல்லை மாநகர பகுதியில் பாளை பொதிகை நகரில் உள்ள ஐயப்பன் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் நேற்று பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் வீடான திருச்செந்தூர் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் கோவில் கடற்கரையில் புனித நீராடி குருசாமியின் கைகளினால் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து