முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 1.4.2003 அன்றைய தேதிக்கு முன்புவரை அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன் பிறகு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

இதற்கிடையே ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த காலங்களில் போராட்டங்களையும் நடத்தினர்.

அப்போது அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக தி.மு.க.வும் வாக்குறுதி அளித்தது. அதன்படி கடந்த தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்று கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டங்களை நடத்தின.

இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய ஓய்வூதிய திட்டங்களின் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, பல்வேறு சங்கங்களுடன் பல கட்டங்களாக இந்தக் குழு ஆலோசனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அந்த குழு சமர்ப்பித்தது. முழு அறிக்கையை டிசம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 6-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன.

இது ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ககன்தீப்சிங் பேடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் கடந்த 30-ம் தேதி சமர்ப்பித்தனர்.

இறுதி அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு எடுத்து, அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழு கொடுத்துள்ள இறுதி அறிக்கையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

முதலில் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியே போட்டா ஜியோ அமைப்பினர் அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டதாக அறிவித்தனர். மேலும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போட்டா ஜியோ அமைப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பழைய ஓய்வூதியம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) நல்ல அறிவிப்பை வெளியிடுவார். 23 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் இன்று எங்கள் கோரிக்கை அமல்படுத்தப்படும். எங்களது கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து