முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பொருளுக்கு அடிமையாகும் இளைய சமுதாயம்: நீதிபதிகளின் கேள்விகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்க முன்வருமா? - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
RBU 2022-11-29

Source: provided

மதுரை : போதை பொருளுக்கு இளைய சமுதாயம் அடிமையாக வருவது குறித்து ஐகோர்ட் நீதிபதிகளின் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்க முன்வருமா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். 

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, 

போதைப் பொருள்கள் பெரும் அச்சத்தை ஏற்பட்டு கேள்விக்குறியாக்குகிற இந்த அபாயகரமான சூழ்நிலையை, அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து இந்த அரசை வலியுறுத்தி வருகிறார்.  ஆளுநரிடமும் எடப்பாடியார் போதை பொருள் குறித்து, இந்த அரசு நடவடிக்கை எடுக்க தவறியதை சுட்டிக்காட்டி உள்ளார்.  தமிழ்நாட்டிலே சட்ட விரோதமாக போதை பொருள் தடுப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற சூழ்நிலையிலே, அதைவிட இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை நாம் பார்க்கிறபோது, இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை தான் இந்த நாட்டு மக்கள் கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கிறார்கள். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த இருவர் பல நூறு கோடி ரூபாயிலே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. இது குறித்து  மதுரை உயர்நீதிமன்ற கிளை  நீதியரசர்களே கேள்வி எழுப்பி உள்ளார்கள்.  டாஸ்மாக் கடையினுடைய நேரம் பொதுவாக 12 முதல் 10 மணி வரை என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, இன்றைக்கு 24 மணி நேரமும் செயல்படுகிறது.  மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னணியில் உள்ளது. கடைகள் செயல்படும் நேரத்தை மேலும் குறைத்தால் என்ன என்று இந்த அரசுக்கு பகிரங்கமாக நீதியரசர்கள் கேள்வி கேட்டிருக்கிறது என்பது இந்த அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் டாஸ்மாக் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா என்று நீதியரசர்கள் இன்றைக்கு கேள்வி கேட்டிருக்கிறார்கள். 

பாலாறு, தேனாறு ஓடிய தமிழ்நாட்டில், டாஸ்மாக் பார்கள் ஓடுகிற ஒரு அவல நிலை உள்ளது . பிள்ளைகளுக்கு மடிக்கணிணி கொடுத்து, கணினி புரட்சி ஏற்படுத்தி, வல்லரசு நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் மாணவர்களை அறிவு ஆற்றல் மிகுந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கிய திட்டம் தந்த அம்மா, 500 டாஸ்மார்க் கடைகளை மூடினார். அதனை தொடர்ந்து எடப்பாடியார் காலத்தில் 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. இன்றைக்கு கணக்கில் அடங்காத பெட்டிக்கடை போல், மதுபான கடைகள் நாடெங்கும் இன்றைக்கு திறக்கப்பட்டு இருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தினுடைய எண்ணிக்கைக்கும், செயல்படுகிற மதுபான கடைகளுடைய எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. கல்விச்சாலைகள் செய்வோம் என்று சொன்ன இந்த தாய் தமிழ்நாட்டிலே, இன்றைக்கு பார்சாலைகளாக தமிழ்நாட்டுச் சாலைகள் மாறி இருப்பது வேதனையின் உச்சமாகும் .இளைய சமுதாயத்தை காப்பதற்கு நீதியரசர்கள் முன் வைத்திருக்கிற கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த தி.மு.க. அரசு முன்வருமா. இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து