முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் எம்.ஜி.ஆர்.: பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழியை பாடமாக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
CM-1 2022-11-30

Source: provided

சென்னை :  என் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் எம்.ஜி.ஆர். என்றும், பள்ளி,கல்லூரிகளில் சைகை மொழியை பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுத் துவக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, 

தமிழகத்தினுடைய முதல் பெண் முதலமைச்சர் என்ற சிறப்புக்குரியர் அம்மையார் ஜானகி எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆர் இருபதாண்டு காலம் தி.மு.க.வில் இருந்தார். அதற்குப் பின்னால், காலத்தின் சூழ்நிலை கருதி ஒரு தனி இயக்கம் அவர் கண்டார். 

எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. அளவு கடந்த பாசத்தையும், அன்பையும் கொண்டவர் எம்.ஜி.ஆர். அடிக்கடி கோபாலபுரத்திற்கு வருகிறபோதெல்லாம் அன்போடு பேசி எல்லோரிடத்திலும் பாசத்தோடு பழகுவார். ஒரு நாள் அவர் வந்த போது, அவரை சார் என்று ஒருமுறை சொல்லி விட்டேன். உடனே கருணாநிதியிடம் புகார் செய்தார்.  அதெல்லாம் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. 

இப்போது நூற்றாண்டு விழா காணும் ஜானகி எம்.ஜி.ஆர்., தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர். எத்தனையோ தனித்திறமைகளைப் பெற்றிருந்தவர் அம்மையார் ஜானகி. இதை அவருடைய பெயரில் இருக்கக்கூடிய இந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்  என ஆறுமொழிகளையும் அறிந்தவர்தான் அம்மையார் ஜானகி. மிகச்சிறந்த பாடகியாகவும் இருந்திருக்கிறார்.  

சைகை மொழியை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் துறையை முதல்வர் என்கிற முறையில் நான் தான் கையில் வைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த கோரிக்கைகளை செயல் திட்டம் ஆக்குவோம் என்பதை உறுதியோடு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து