Idhayam Matrimony

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மேஜர் ஜெயந்தின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் : சொந்த ஊரில் மக்கள் இறுதி அஞ்சலி

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      தமிழகம்
Jayant 2023 03 18

Source: provided

தேனி : தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் - மல்லிகா தம்பதியின் மகன் ஜெயந்த்(35). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் திரான் பகுதியில் மேஜர்ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். 

ஜெயந்தின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு நேற்று முன்தினம்  இரவு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. அதை தொடர்ந்து ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு நேற்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர். 

அதனை தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தில் மேஜர் ஜெயந்தின் உடல் வைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி, தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெயந்த், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தவர். அதனைதொடர்ந்து மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் பயின்றார். கல்லூரி என்.சி.சியில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனை படைத்தார். இதற்காக குடியரசு தினவிழாவில் பங்கேற்று பதக்கம் பெற்றார். 

ராணுவத்தில் கடந்த 2010-ம் ஆண்டு சேர்ந்த அவர்,  2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார். பைலட் பயிற்சியில் தேர்வு பெற்று 2018-ம் ஆண்டு ஸ்ரீநகரில் பைலட்டாகவும், 2021-ம் ஆண்டில் அசாமில் மிசோரி ராணுவ மையத்தில் மேஜராகவும் உயர்ந்தார். 

2019-ம் ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான செல்லாசாரதாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தனது கணவருடன் மிசோரி ராணுவ குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ராணுவ குடியிருப்பில் மேஜர் ஜெயந்தின் தந்தை வசித்து வருகிறார். 

மேஜர் ஜெயந்தின் தந்தை ஆறுமுகம் கூறுகையில், எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். எனது சகோதரரும், ராணுவத்தில் பணியாற்றினார். அதே போல நானும் ராணுவத்தில் சேர முயன்றும் முடியவில்லை. இதனை தொடர்ந்து எனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று சிறுவயது முதலே தெரிவித்து வந்தேன். 

அவரும் அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இன்னும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இருந்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இருந்த போதும் அவரது தற்போதைய சேவை வரை மனநிம்மதி அளிக்கிறது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து