முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் உயிர் தோழன் பட நடிகர் பாபு காலமானார்: இயக்குனர் பாரதிராஜா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      சினிமா
Bharathiraja 2023-09-19

சென்னை, என் உயிர் தோழன் பட நடிகர் பாபு நேற்று காலமானார். அவருக்கு இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் என் உயிர் தோழன். இந்த படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவை கதாநாயகனாக்கி படத்தை வெற்றி படமாக மாற்றினார் பாரதிராஜா. 

அரசியல் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முத்திரை பதித்தவர் பாபு. அன்றிலிருந்து என் உயிர் தோழன் பாபு என்ற பெயருடன் வலம் வந்த இவர் விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் கதாநாயகான நடித்தார். 

நான்கு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பாபு, கடந்த 1991-ல் மனசார வாழ்த்துக்களேன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சண்டை காட்சி ஒன்றில் மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. 

இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு தயாராகினார். ஆனால், படப்பிடிப்பு குழுவினர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறி டூப் நடிகரை தயார்படுத்தியுள்ளனர். பாபு நானே குதிக்கிறேன் என்று குதித்த போது டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். 

இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். 

இந்நிலையில், நடிகர் பாபு நேற்று காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 

திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த என் உயிர் தோழன் பாபுவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து