முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      ஆன்மிகம்
Ayodhya-temple-2023-12-07

லக்னோ, ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க 3 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி பிரதமர் மோடி கோவில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தது முதலே கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

வரும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொழில் அதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, நடிகர்கள் அமிதாப்பச்சன், அக்சய் குமார், பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகை கங்கனா ரனாவத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி , பிரபல டி.வி. தொடரான ராமாயணாவில் ராமர் மற்றும் சீதாவாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா மற்றும் 3 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் 1990-ல் இருவேறு போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழந்த 50 கர சேவகர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அழைத்து வருவது, உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை விஸ்வ இந்து பரிஷத் மேற்கொண்டுள்ளது.

இது தவிர 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்கள், மத தலைவர்கள் மற்றும் மிக முக்கிய பிரபலங்கள், எழுத்தாளர்கள், நாட்டின் பல்வேறு துறை நிபுணர்கள், ஓய்வுபெற்ற முக்கிய ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள், இசையமைப்பாளர்கள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கும் கோவில் டிரஸ்ட் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து