முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரவையில் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம்: அ.தி.மு.க. அழிந்து போகும் எனும் சொல்லும் அண்ணாமலைக்கு மக்கள் சாபம் விட வேண்டும் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேச்சு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      தமிழகம்
Sellur-Raju 2024-04-12

Source: provided

மதுரை : மதுரை பரவையில் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது அ.தி.மு.க. அழிந்து போகும் எனும் சொல்லும் அண்ணாமலைக்கு மக்கள் சாபம் விட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மதுரை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பரவை மந்தை பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம்.எல்.ஏ. அ.தி.மு.க.அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். அருகில் தேர்தல் பொறுப்பாளர் கே.ஏ.கே. முகில், எம்.எஸ்.பாண்டியன், சேர்மன் கலா மீனா ராஜா, முன்னாள் சேர்மன் பரவை ராஜா, பா.குமார்,ஏ.பார்த்திபன், மார்க்கெட் மார்நாடு மற்றும் பரவை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளனர்.

இந்த பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் உண்மைக்கும், பொய்க்கும் நடைபெறக்கூடிய தேர்தல். அ.தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது. தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. திராவிட பூமியில் மக்கள் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.

பொய்களை கூறியே மத்தியில் பா.ஜ.க.வும், மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்துள்ளது. 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத பிரதமர் மோடி இப்பொழுது நான் தமிழராக பிறக்கவில்லையே என கூறுகிறார். தமிழ்நாட்டில் அண்ணாமலை எனும் ஆட்டுக்குட்டி உள்ளது.  ஆளுங்கட்சி எனும் திமிரில், மெத்தனத்தில் அண்ணாமலை பேசி வருகிறார்.

அண்ணாமலை முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான், அண்ணாமலை அ.தி.மு.க. அழிந்து விடும் என சொல்கிறார். அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி, 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக எனும் கட்சியை இருக்காது என மு.க.அழகிரி கூறினார். இன்று மு.க.அழகிரி அரசியலில் இல்லை. அண்ணாமலை கவுன்சிலர் பதவியில் கூட நின்று வெற்றி பெற்றதில்லை. அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் நின்று சரியாக மாட்டிக் கொண்டுள்ளார். அ.தி.மு.க.வையும் அதன் தலைவர்களை பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது.

பா.ஜ.க. தொடங்குவதற்கு முன்பாகவே 1972-ல் அதிமுக தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக தொடங்கும் போது பாஜக எனும் கட்சியே இல்லை. அதிமுக அழிந்து போகும் எனும் சொல்லும் அண்ணாமலைக்கு மக்கள் சாபம் விட வேண்டும். மக்களுக்காக உழைத்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களே அண்ணாமலை தவறாக பேசுகிறார். 10 ஆண்டுகள் ஆட்சியில் பா.ஜ.க. தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளது.

மக்கள் நினைத்தால் தான் மந்திரி இல்லை என்றால் தெருவுக்கு தான் செல்ல வேண்டும் என ஜெயலலிதா எங்களுக்கு அறிவுறுத்துவார்.மக்களுக்காக அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை.அதிமுக அழிந்து விடும் எனக்கூறும் அண்ணாமலை தேர்தலுக்குப் பின்னர் அழிந்து விடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து