முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புதிய அரசியலை மக்களுக்கு காட்டவே டி.டி.வி. தினகரன் நிற்கிறார்: தேனியில் அண்ணாமலை பிரசாரம்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      அரசியல்
TTV-Annamalai-2024-04-13

தேனி, தமிழ்நாட்டில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான், டிடிவி தினகரனே நிற்கிறார் என்றும், தி.மு.க.வும்,  அ.தி.மு.க.வும் வேறு வேறு இல்லை,  இரண்டும் ஒன்று தான் என்றும் தேனியில் பிரசாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும்,  அமமுக பொதுச்செயலாளருமான டிடிவி தினகரனை ஆதரித்து தேனி பங்களாமேடு பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசியதாவது., தமிழ்நாட்டில் அரசியல் மாறிக் கொண்டிருக்கிறது.  2026 ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் 2024 பாராளுமன்ற தேர்தலில் போடப்பட்டிருக்கிறது.  10 ஆண்டுகள் பிரதமர் மோடியின் ஆட்சி எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.  விளம்பரமே தேவையில்லாத ஆட்சி பா.ஜ.க. ஆட்சி.  தி.மு.க.வினர் விளம்பரம் செய்து,  வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டை வளமாக்க பா.ஜ.க.வுக்கு 400 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை. அதில் டிடிவி தினகரனும் இருக்க வேண்டும். தேனியின் குரலாக யார் இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.  இந்தியாவை காக்க வாருங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.  அவரிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற தான் நாங்கள் முயற்சிக்கிறோம்.தேனியில் டிடிவி தினகரன் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.  அவர் தனது கட்சியில் இருந்து எந்த தொண்டரை நிறுத்தி இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவார்.  மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும், தமிழ்நாட்டில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான், டிடிவி தினகரனே நிற்கிறார்.

தி.மு.க.,  அ.தி.மு.க. இரண்டும் ஒன்றுதான்.  தொண்டர்கள் வேறு வேறாக இருக்கலாம்.  இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுதான்.  டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கட்சி வேட்பாளர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.  ஏப்ரல் 19-ம் தேதி அ.தி.மு.க. தொண்டர்களும் டிடிவி தினகரனுக்கு தான் வாக்களிக்கப் போகின்றனர். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து