முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Meenachi 2024-04-19

Source: provided

மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. 

தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின் 12 மாதங்களும் மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனைத் தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும்.மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 

அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின்  நேற்று 19-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், இன்று 20-ம் தேதி திக்விஜயம் நடைபெறுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நாளை 21-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 

இந்த திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 22-ம்  தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 23-ம் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வரும் நேரங்களில் பக்தர்களால் சுவாமிக்கு உகந்த மாலைகளால் சாத்துப்படி செய்யலாம். ஆனால் கேந்தி பூ, மருதை வேர்கள் இணைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்று கொள்ளப்பட மாட்டாது. 

திருக்கல்யாணத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன், சுவாமிக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டு பரிவட்டங்கள் சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழுவினரும், கோவில் நிர்வாகமும் தீவிரமாக செய்து வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து