முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினேஷ் கார்த்திக் ஓய்வு

வியாழக்கிழமை, 23 மே 2024      விளையாட்டு
dinesh

Source: provided

17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியோடு தனது ஓய்வை அறிவித்துள்ளார். 22 அரை சதங்கள் உட்பட அதிகபட்சமாக 97 ரன்கள் குவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் பிரியாவிடை அளித்தனர். இந்தியாவிற்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,025 ரன்கள் அவர் குவித்துள்ளார். டெஸ்டில் அதிகபட்சமாக 129 ரன்களை விளாசியுள்ள தினேஷ் கார்த்திக், 57 கேட்ச் மற்றும் 6 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்.

இதேபோல் 94 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1,852 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 79 ரன்கள் அடித்துள்ளார். 64 கேட்சுகள் மற்றும் 7 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 672 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்து உள்ளார். 26 கேட்சுகள் மற்றும் 8 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். 17 ஆண்டுகளாக விளையாடி வந்த போதும், ஐபிஎல்-ல் கோப்பை வென்ற ஒரு அணியிலும் தினேஷ் கார்த்திக் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து

நடப்பு ஐபிஎல் தொடரில் 41 முறை 200 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 முறை 250 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஒரு அணியால் அதிகபட்ச ரன்கள் (287 ரன்கள்) குவிக்கப்பட்ட சாதனையும் நிகழ்ந்தது.  இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்படுவது இம்பாக்ட் பிளேயர் விதியால் மட்டுமல்ல எனவும், பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதால் அதிக ரன்கள் குவிக்கப்படுகிறது எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாவிட்டாலும், அதிக ரன்கள் குவிக்கப்படும். என்னைப் பொறுத்தவரை, பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறுவேன். அதேபோல ஆடுகளங்கள் தரமாக உள்ளன. எதிர்காலத்தில் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டியிருக்கும். எவ்வளவு நன்றாக பந்துவீசினாலும், பந்துவீச்சாளர்கள் நன்றாக பேட்டிங் செய்யவும் வேண்டும். போட்டிகள் அவ்வாறுதான் தற்போது சென்று கொண்டிருக்கின்றன என்றார்.

சி.எஸ்.கே வீரர் ராயுடு கிண்டல்

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது. 

இந்நிலையில், பெங்களூரு அணியின் தோல்வி குறித்து முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ராயுடு காட்டமாக விமர்சித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் பேட்டி அளித்த ராயுடு, "கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தினாலும் ஐபிஎல் கோப்பைகள் வெல்லப்படுவதில்லை. சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. கோப்பையை வெல்ல பிளே ஆஃப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும். திறமையான இந்திய வீரர்களை பெங்களூரு அணி கண்டுபிடிக்க வேண்டும். திறமையான இந்திய வீரர்களை கண்டுபிடித்ததால் தான் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் வெற்றிகரமான அணிகளாக உள்ளது என்பதை பெங்களூரு அணி உணர வேண்டும்" என்று பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து