முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்ற அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      விளையாட்டு
24-Ram-53

Source: provided

ஹூஸ்டன்: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தொடரைக் கைப்பற்றி அமெரிக்க அணி அசத்தியுள்ளது.

சுற்றுப் பயணம்... 

அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்று வங்கதேச அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி ஹூஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தன்சீம் - ரிசாத்...

இதையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணியில் கேப்டன் மொனாங்க் படேல் 42 ரன்களும், ஸ்டீவன் டெய்லர் 31 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் 35 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரங்களை எடுத்து இருந்தது. வங்கதேச அணி சார்பில் ஷரிபுல் இஸ்லாம், தன்சீம் அசன், ரிசாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது.

138 ரன்கள்...

ஆனால் அதன் துவக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். நஸ்முல் உசேன் 36 ரன்களும், ஷஹீத் அல்ஹசன் 30 ரன்களும், தவ்ஹீத் ஹிரிடோய் 25 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதன் காரணமாக 19.3 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் அமெரிக்கா அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2-0 கணக்கில் ...

அமெரிக்கா அணி தரப்பில் அலி கான் 3 விக்கெட்டுகளையும், சவுரப், ஷேட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகித்து வரும் அமெரிக்கா அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கனடா அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்கா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தயாராகவில்லை...

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றில் கூறுகையில், உலகக்கோப்பை தொடருக்கு வங்கதேச அணி இன்னும் முழுமையாக தயாராகவில்லை, எங்களின் பயிற்சி போதாது, பெரிய அணிகளுடன் மோதுவதற்கான வலு இன்னும் வங்கதேச அணிக்கு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி,  அமெரிக்க அணி உடனான தோல்விக்குப் பின் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து