முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலை பேச்சு: ஜெயக்குமார் கண்டனம்

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
Jayakumar 2023 04 15

சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரை மதவாத தலைவர் என களங்கப்படுத்துவதா என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழகத்தில்  எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, அம்மா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்திருக்கிறார். தமிழக  அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவரான அவரது  நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும்.

அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும், தமிழகத்தில்  தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து