முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்வம் காட்டாத ஹஸ்ஸி

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      விளையாட்டு
Michael-Hussey 2024-05-26

Source: provided

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தற்போது வகிக்கும் பயிற்சியாளர் பொறுப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதன்மூலம், பயிற்சியாளர் மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டையும் கவனிக்க சரிவர நேரம் கிடைக்கிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க எனக்கு ஆர்வமில்லை என்றார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் இருவரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டாததது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________

கௌதம் காம்பீருக்கு காசோலை 

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் கௌதம் காம்பீருக்கு, அந்த அணியின் இணை உரிமையாளர் ஷாருக்கான், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியின் ஆலோசகராக இருக்குமாறு வெற்றுக் காசோலை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் காம்பீர் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், காம்பீருக்கும் ஆர்வம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அவர் 100 சதவீதம் உத்தரவாதம் இருந்தால் மட்டுமே விண்ணப்பிப்பதாகவும், இல்லையெனில் விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில், கேகேஆர் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கௌதம் காம்பீரை கேகேஆர் அணியின் ஆலோசகராக வைத்திருக்க விரும்புவதாக கூறியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியில் ஆலோசகராக இருக்க காம்பீருக்கு ஷாருக்கான் ஒரு வெற்றுக் காசோலை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட காம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், கேகேஆரை விட்டு வெளியேறுவது குறித்து ஷாருக்கானுடன், காம்பீர் ஆலோசனை மேற்கொண்ட பிறகே இறுதியான முடிவு தெரிய வரும்.

________________________________________________________

இந்திய அணி குறித்து சைமன் 

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த உலகக்கோப்பை முடிந்ததும் மூத்த வீரர்களுக்கு பதிலாக டி20 அணியில் ருதுராஜ் போன்ற இளம் வீரர்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக அபிஷேக் சர்மா போன்ற ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

________________________________________________________

பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவை சேர்ந்த வாங் ஜி யி உடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து அடுத்த இரு செட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த ஆட்டத்தில் வாங் ஜி 16 - 21, 21-5 மற்றும் 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். 

________________________________________________________

ஐ.பி.எல். சிறந்தது: வாகன்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முன்னதாக இந்தத் தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாகவே வெளியேறினார்கள். குறிப்பாக ஜோஸ் பட்லர், மொயின் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜேக்ஸ் போன்ற வீரர்கள் வெளியேறியது ராஜஸ்தான், சென்னை, பெங்களூரு ஆகிய அணிகளின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஒன்றும் முழுமையாக விளையாடுங்கள் இல்லையெனில் ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என்று இர்பான் பதான் கடுமையாக விமர்சித்தார். 

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு நிகரான தரம் பாகிஸ்தான் அணியிடம் இல்லை என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். எனவே பில் சால்ட் போன்ற வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட இங்கிலாந்து வாரியம் அனுமதித்திருக்க வேண்டும் என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "தங்களது அனைத்து வீரர்களையும் திரும்ப அழைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தவறு செய்துவிட்டது என்று நினைக்கிறேன். வில் ஜேக்ஸ், பில் சால்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அங்கே அழுத்தம், அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம், எதிர்பார்ப்பு ஆகியவை இருக்கும். எனவே அங்கு விளையாடுவது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடுவதை விட சிறந்ததாக இருக்கும் என்று நான் வாதிடுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து