முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் பந்தயம் நடத்தும் திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      தமிழகம்
OPS 2023-10-25

சென்னை, தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கார் பந்தயம் நடத்துவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், கார் பந்தயம் நடத்தும் திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகனக் கட்டண உயர்வு, கட்டட அனுமதிக் கட்டண உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ள நிலையில், சென்னையில் கார் பந்தயத்தை நடத்தப் போவதாக தி.மு.க. அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். 

தமிழ்நாட்டினுடைய கடன் 8,33,362 கோடி ரூபாயாகயும், நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாகவும் இருக்கின்ற நிலையில், இந்தக் கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியம்தானா என்பதை தி.மு.க. அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டம், மாதம் ஒருமுறை மின் கட்டணம், ரேஷன் கடைகளில் கூடுதலாக உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை, கல்விக் கடன் ரத்து, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவர்களுக்கான 354 அரசாணையை நடைமுறைப்படுத்துதல், எரிவாயு மானியம், மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புதல், இரண்டு லட்சம் கூடுதல் பணியிடங்களை உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில், பாதிக்கப்பட்டோர் அனைவரும் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். பல பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்க முடியாத அவல நிலை நீடிக்கிறது.மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இப்படிப்பட்ட சோதனை காலத்தில், சென்னையில் கார் பந்தயம் நடத்துவது என்பது ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது.

சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இந்தக் கார் பந்தயத்தின் மூலம் விளையாட்டுத் துறை அமைச்சர் முன்னிலைப்படுத்தப்படுவாரே தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை. மாறாக, மக்களின் பணம் வீணடிக்கப்படும். தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கார் பந்தயம் நடத்துவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்தக் கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து