முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள்: சென்னையில் ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      தமிழகம்
Chennai 2023 04 25

Source: provided

சென்னை : சென்னையில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டியவர்கள் மீது ரூ.8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் 5,900 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டிட கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரமாக கட்டிட கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியானது மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்களால் கடந்த மாதம் 7-ம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த மாதம் 7-ம் தேதி முதல் கடந்த மாதம் 16-ம் தேதி வரை தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களிலும், இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 17-ம் தேதி முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்கள் உட்பட அனைத்து 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளுக்காக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 101 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த  07.01.2025 முதல் 06.02.2025 வரை மண்டலம் 1 முதல் மண்டலம் 8 வரையிலான வடக்குப் பகுதிகளில் 13,142.86 டன் கட்டிட கழிவுகளும், மண்டலம் 9 முதல் 15 வரையிலான தெற்குப் பகுதிகளில் 11,820.04 டன் கழிவுகளும் என மொத்தம் 24,963 டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டிட கழிவுகளை அகற்றும் தீவிரத் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சராசரியாக 1000 டன் வரையிலான கட்டிட கழிவுகள் தினசரி அகற்றப்படுகிறது. ஒரு டன் வரையிலான கழிவுகள் மாநகராட்சியின் சார்பில் கட்டணமின்றி அகற்றப்படும். ஒரு டன் முதல் 20 டன் வரையிலான கட்டிட கழிவுகளை உருவாக்குபவர்களுக்கும், 20 டன் மேலான பெருமளவில் கட்டிட கழிவுகளை உருவாக்குபவர்களுக்கும் கட்டணம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதனைப் பின்பற்றி கட்டிட கழிவுகள் அகற்றப்படும். சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது ரூ.5000 அபராதக் கட்டணமும், காவல்துறையின் மூலம் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கடந்த 01.01.2025 முதல் 31.01.2025 வரையிலான ஒரு மாத காலத்தில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டியவர்கள் மீது கண்காணிப்புப் படையினரால் ரூ.8,06,000 அபராதம் விதிக்கப்பட்டும், வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது மற்றும் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்ற வேண்டுமெனில் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் மீது மாநகராட்சியின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படும். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியினை சுத்தமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பெரிதும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து