முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு

புதன்கிழமை, 26 நவம்பர் 2025      தமிழகம்
KKSSR 2023 04 01

Source: provided

சென்னை : தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் பல்வேறு துறை உயர் அலுவலர்களுக்கும் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கும் பேரிடரை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் கடந்த இரு நாட்களில் தென் மாவட்ட மற்றும் டெல்டா மாவட்ட கலெக்டர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நேற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் காணொலி காட்சி மூலம் தயார்நிலை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

நீர்த்தேக்கங்களில் உபரிநீர் இருப்பினை முன்கூட்டியே திறத்தல் மற்றும் முறையான நீர் மேலாண்மையின் மூலம் நகரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்படாதவாறு பாதுகாக்குமாறும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும், தேவைக்கேற்ப பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்குமாறும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆகியோரின் வெளியேற்றத்தில் கவனம் செலுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பேரிடரை எதிர்கொள்ள அனைத்து உபகரணங்களுடனும், கனரக வாகனங்களுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும், மூன்று அணியினர் நாகப்பட்டினம் மாவட்டத்திலும், இரண்டு அணியினர் கடலூர் மாவட்டத்திலும், இரண்டு அணியினர் சென்னை மாவட்டத்திலும், ஒரு அணி திருவள்ளூர் மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும், ஒரு அணி இன்று முதல் விழுப்புரம் மாவட்டத்திலும், ஒரு அணி சென்னை மாவட்டத்திலும் முன்கூட்டியே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக ஐந்து அணியினர் அரக்கோணத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எம்.சாய்குமார், அரசு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பெ.அமுதா, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.முத்துக்குமரன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து