முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலிய மாலுமிகளுடன் அந்நாட்டு அமைச்சர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

கொச்சி, பிப்.24 - இரண்டு இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இத்தாலிய கப்பல் பாதுகாவலர்களை அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஸ்டெபான் டி மிஸ்துரா நேற்று சந்தித்து பேசினார். கடந்த 15 ம் தேதி கேரள கடற்பகுதியில் இரண்டு இந்திய மீனவர்களை கொள்ளையர்கள் என நினைத்து இத்தாலிய கப்பலில் வந்த பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மற்றும் இத்தாலிய தூதரக அதிகாரிகளிடையே பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச சட்டப்படி இந்திய அதிகாரிகள் தங்களைக் கைது செய்ய முடியாது என்று இத்தாலிய கப்பலின் மாலுமிகள் கூறிவந்தாலும்கூட இந்திய தண்டனைச் சட்டம் இ.பி.கோ. 302 ன்கீழ் வழக்குப்பதிவு செய்து இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் இருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் கொச்சியில் நேற்று இத்தாலிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஸ்டெபான் டி மிஸ்துரா சந்தித்து பேசினார். இத்தாலிய அமைச்சருடன் இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் ஜியா கோமோ சன்பெலிஸும் இருந்தார். இந்தியாவுக்கான இத்தாலிய துணைத் தூதர் (மும்பை) ஜியாம்பவ்லோ, கட்டிலோவும் வந்திருந்தார். 

முன்னதாக கோட்டையம் வந்திருந்த இத்தாலிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஸ்டெபான் டி மிஸ்துரா கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்துப் பேசினார். ஆனால் இந்த சந்திப்புக்கு பிறகு இத்தாலிய பாதுகாவலர்களை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு பாதுகாவலர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதனால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்திய மீனவர்கள் இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களை விடுதலை செய்வது குறித்து பேசுவதற்கு வழியில்லை என்று கேரள முதல்வர் சாண்டி மறுத்துவிட்டார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இத்தாலிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony