முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படபிரச்சினை: முதல்வர் தலையிட வேண்டுகோள்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.8 - நடிகர் கமல்ஹாசனின், ``விஸ்வரூபம்'' படம் டி.டி.எச் தொழில்நுட்பத்தில் வெளியிடப்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தமிழக முதல்வர் தலையிட்டு திரையுலகை காப்பாற்றவேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-

நம்முடைய திரைஉலகத்தின் மூத்த சகோதரியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகம் சார்பிலும் வைக்கும் பணிவான வேண்டுகோள்:

பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கும், திரையரங்க உரிமையாளர்களின் சார்பாக அபிராமி ராமநாதனின் விடுக்கும் செய்தி:-

நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்றது.  இதில்  கமல்ஹாசன் தன் ``விஸ்வரூபம்''படத்தை டிடிஎச் மூலம் திரையிடுவது பற்றி பல சந்தேங்கள் இருந்ததால் மதுரையில் இருந்த கமல்ஹாசன் அவர்களுடன் டெலி கான்பரன்சிங் மூலம் பல சந்தேகங்கள் கேட்டனர்.  அதில் அவர் கொடுத்த விளக்கங்கள் கீழ் வருமாறு:-

1. விஸ்வரூபம் படம் டிடிஎச் முறையில் ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும்.

2. அப்படி திரையிடும்போது திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒரு நாள் முன்பு இரவு 9.00 மணிக்கு மேல் திரையிடப்படும்.

3. இதற்கு ஒரு டிடிஎச் கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ. 1000/-​ வசூல் செய்யப்படும்.

4. இது அவருடைய படத்திற்கு டிரைலர் போன்று இருக்கும்.  இதைப் பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள் என்று கூறினார்.

அதன் பிறகு அவர் கூறியதை வைத்து விவாதித்த போது மேலும் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின.  அவற்றுள் சில:

1. ஒரு டிடிஎச் கருவிக்கு ஒரு குடும்பம் தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது.

2. இந்த டிடிஎச் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டை ஹோட்டல்கள் மற்றும் கிளப்கள் முதலியவற்றில் காண்பிப்பது போல் இதையும் காண்பித்து விட்டால் ஒவ்வொரு டிடிஎச்சையும் பல நூறு பேர்கள் பார்ப்பார்கள்.  உதாரணமாக ஒரு கிளப்பில் இப்படத்தை திரையிட்டால் பெரிய கிளப்களில் 3000, 4000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவரும் வந்து இதை பார்ப்பார்கள்.  டிவி க்களும் தற்போது 52 இஞ்ச்களில் கிடைக்கிறது.  அத்துடன் இந்த டிடிஎச் கம்பெனிகாரர்கள் ஒரு டிடிஎச் கருவிக்கு மூன்று டிவி பார்ப்பது போல் உபகரணங்கள் கொடுக்கிறார்கள்.  இப்படியெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் நாடு முழுவதும் பல கோடி பேர்கள் படம் பார்த்து விடுவார்களே?  

3. இப்படி நடந்தால் திரையரங்கங்கள் பக்கம் யார் வருவார்கள் என்ற பயம் அனைவருக்கும் வந்து விட்டது. திரையுலகின் முன்னோடியாகச் செயல்படும்  கமலஹாசன் இத்திரைத்துறையை நேசிப்பவர்.  ஆனால் இவர் ஒரு காட்சி மட்டும் தான் என்று உறுதி அளிக்கிறார்.  ஆனால் இவருக்குப் பின் வரும் மற்ற பெரிய படங்கள் அனைத்திற்கும் நிறைய காட்சிகளை கொடுத்து விட்டால் என்ன செய்வது?

4. இப்படி டிடிஎச் கம்பெனிகார்கள் சிறுமுதலீட்டுப் படங்களை வாங்கப் போவதில்லை.

5. திரையரங்கங்கள் இந்த பாதிப்பினால் ஒவ்வொன்றாக மூடி விட்டால் பிறகு சிறு முதலீட்டுப் படங்களே இல்லாமல் போய் விடுமே?

6. இப்படி பல பயங்கள் எங்கள் எல்லோர் மனதிலும் ஏற்பட்டதால் எங்கள் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்ட ஒரு மித்த முடிவு என்ன வெனில் கமல்ஹாசனை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக் கொள்ள இருக்கிறோம்.  இம்முறை உலகத்திலேயே எங்குமில்லை என்பது உண்மை.  கமல்ஹாசன் எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த முறையை கைவிட்டு விடுவார் என்று நம்புகிறோம்.

7. திரையரங்கங்களை பொருத்த வரை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி தான் எந்த ஒரு முடிவும் எடுப்போம்.

திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் நமது முதலமைச்சர் ஜெயலலிதா இதில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வைக் காண வேண்டும், எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்