முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலை கடத்தலில் ஈடுபட்ட சிறுசேமிப்பு துறை இணை இயக்குநர் கைது

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - சிலை கடத்தில் ஈடுபட்ட சிறுசேமிப்பு துறை இணை இயக்குநர் உட்பட 3 பேரை சிலை கடத்தில் தடுப்பு பிரிவு போலீசார் பொறிவைத்து பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 2 சிலைகள் மீட்கப்பட்டன.

இது பற்றி விபரம் வருமாறு:-

சென்னை சிலை கடத்தல் தடுப்பி பிரிவு டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் ஆய்வாளர் காதர்பாட்ஷா ஆகியோருக்கு செங்குன்றம் பஸ் நிலையம் அருகே சிலை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் ஆய்வாளர் காதர்பாட்ஷா உள்ளிட்ட தனிப்படையினர் மறைந்திருந்து கண்காணித்து கொண்டிருந்தனர். 

அப்பொழுது சாக்கு கையில் சாக்குப்பையுடன் ஒரு ஆசாமி சந்தேகத்திற்கு இடமான முறையில் பஸ்நிலையத்திற்குள் வந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த சிறுப்புத்துறையை சேர்ந்த அரசு ஜீப் அருகில் சென்ற அந்த ஆசாமி ஜீப்பில் இருந்தவர்களிடம் ஏதோ பேசினான். பிறகு தான் கொண்டுவந்த சாக்குப்பையுடன் அந்த ஜீப்பில் ஏறி அமர்ந்தான். 

ஜீப் பஸ் நிலையத்தை விட்டு புறப்பட்டு வெளியே சென்றது. அப்பொழுது ஆய்வாளர் காதர்பாட்ஷா தலைமையிலான போலீசார் சிறுசேமிப்புத்துறை ஜீப்பை சுற்றி வளைத்தனர். ஜீப்பினுள்ளே சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர் போலீசாருக்கு முறையான பதில் அளிக்காமல் நான் யார் தெரியுமா? சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர், பெரிய அதிகாரி என்னிடமே விசாரணையா என்றெல்லாம் போலீசாரை மிரட்டத்தொடங்கினார். அவரை சமாளித்து போலீசார் ஜீப்பினுள் இருந்த சாக்கு பையை சோதித்தனர். அதில் சுமார் 1 1/2 அடி உயரமுள்ள பெருமாள் உலோக சாமி சிலை ஒன்றும், சுமார் 1 அடி உள்ள தேசிகர் சாமி சிலை ஒன்றும் இருந்தது. 

இது பற்றி சாக்கு பையை எடுத்து வந்த ஜோசப் என்பவனை விசாரித்தபோது இந்த சிலைகள் கடந்த 2008-ம் ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம், சிவா ஆகியோரால் திருக்கழுக்குன்றம் நெரும்பூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலிருந்து திருடப்பட்டது என்றும், ஏற்கனவே 2 சிலைகள் போலீசாரால் மீட்கப்பட்டது என்றம், 2 சிலைகளை தாம் விற்பதற்காக தனது நண்பர் தனசேகர் என்பவரை அணுகியபோது அவர் மூலம் சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் நல்ல விலைக்கு விற்றுத்தருவார் என்பது தெரியவந்ததாகவும், சீனிவாசனை தன்னை தொடர்பு கொண்டு செங்குன்றம் பஸ் நிலையத்திற்கு சிலையுடன் வரச்சொன்னதாகவும், அதன் படி தான் பஸ் நிலையம் வந்து ஜீப்பில் அமர்ந்திருந்த சீனிவாசனிடம் சிலையை ஒப்படைத்து உடன் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்து விட்டதாக வாக்கு மூலத்தில் கூறியுள்ளான்.

அதையடுத்து போலீசார் செங்குன்றம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோசப் (37), கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (58) மற்றும் சூளைமேடு பஜனை கோயி தெருவைச்சேர்ந்த சிறுசேமிப்புதுறை இணை இயக்குநர் சீனிவாசன் (49) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட 2 சிலைகளும் ரூ.25 லட்சம் மதிப்புள்ளது என்றும், சிலை கடத்தி கைதான சிறுசேமிப்புத்துறை இணை இயக்குநர் சீனிவாசன் பல ஆண்டுகளாக இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணை தெரியவந்ததாகவும், கைப்பற்றப்பட்ட 4 சிலைகள் போக மீதமுள்ள 2 சிலைகள் பற்றிய தகவல்கள் சிலையை திருடிய செல்வம், சிவா ஆகியோரை கைது செய்தபின்பே தெரியவரும் என்று துணைக்கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார். 

அரசு பணியில் மிக உயர்ந்த சம்பளத்தில் உள்ள ஒரு அதிகாரியே சாமி சிலைகளை கடத்தி விற்பது பற்றிய தகவல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்