முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி: முதல்வர்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.6 - நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு மொத்தமாக அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான அரசு,  இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க எனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டது.  அதன்படி, பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த  அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  இது இஸ்லாமிய பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்ற ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசியை வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க தற்போது நான் ஆணையிட்டுள்ளேன். 

ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், மாநிலம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடைவதுடன், 4000 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்