முக்கிய செய்திகள்

48 மணி நேர தெலுங்கானா பந்த்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
Telangana 0

 

ஐதராபாத்,பிப்.23 - தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்காக மசோதா கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி தெலுங்கானா போராட்ட கமிட்டி விடுத்திருந்த 48 மணி நேர பந்த் போராட்டத்தால் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதிகளில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போனது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடிக் கிடந்தன. சாலை போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. பஸ்கள், ஆட்டோ ரிக்சாக்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் செகந்திராபாத் ரயில் நிலையம் மற்றும் மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். 

தனித் தெலுங்கானா மாநிலம் கோரி நடந்து வரும் இந்த போராட்டத்துக்கு தெலுங்கான பகுதி அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தினார்கள். இந்த பந்த்தை முன்னிட்டு போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குறிப்பாக சட்டசபை அருகே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மொத்தத்தில் இந்த 48 மணி நேர பந்த்தால் தெலுங்கானா பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது.

இதை ஷேர் செய்திடுங்கள்: