முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசாமி கோவில் பாதாள அறையை திறக்க சுப்ரீம்கோர்ட்டு தடை

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை - 9 - திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் உள்ள 5 பாதாள அறைகளில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் மற்றும் விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  இந்த கோவிலில் உள்ள 6 வது  பாதாள அறையைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தின் வாரிசு   ராஜமார்த்தாண்ட வர்மா சுப்ரீம் கோர்ட்டில்  ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் சார்பில் வாதாடிய பிரபல வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், பத்மநாபசாமி கோவில் ஒரு பொதுச்சொத்து என்றும் இந்த கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த  ஆபரணங்களை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உரிமையோ, சொந்தமோ கொண்டாட முடியாது என்றும் வாதிட்டார்.
இந்த ஆபரணங்கள் அனைத்தும்  மன்னர் குடும்பத்தினருக்கு சொந்தமானது அல்ல. இவை அனைத்தும் பத்மநாபசாமி கோவிலுக்கு  சொந்தமானது என்றும் அவர் வாதிட்டார்.
பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மாநில அரசின் கடுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்போவதாக  கேரள அரசு அறிவித்து இருந்தது.  இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு,  மாநில அரசின்  நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது.
இந்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து ராஜமார்த்தாண்ட வர்மா சுப்ரீம்  கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல் முறையீட்டு  மனு மீது சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்  விசாரணை நடத்தியது.
பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6-வது பாதாள அறையை திறக்க 7 பேர் கொண்ட ஆய்வு குழுவுக்கு  சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.
மேலும் இந்த  கோவிலின் புனித தன்மையையும்  பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கோவிலின் அறங்காவல் குழுவுக்கும், கேரள அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விலை மதிக்க முடியாத தங்க வைர, வைடூரிய ஆபரணங்கள் இருப்பதால் இந்த  கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கேரள அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த கோவிலில் உள்ள கருவறை மற்றும் அதில் உள்ள தெய்வங்கள் மீதிருக்கும் கண்களைவிட இப்போது அந்த கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆபரண குவியல்கள் மீது அதிகமான கண்கள் இருப்பதால் அந்த கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அவசியம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த  கோவிலில் உள்ள பாதாள அறைகளில் ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்த வீடியோ  ஆதாரங்களை  சமர்ப்பிக்கும்படி  கடந்த 6 ம் தேதிய விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள் இது  தொடர்பான விசாரணையை  அடுத்த வாரம்  வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் இந்த ஆபரணங்களை  கேரள அறங்காவல்  துறை  செயலாளர் அல்லது  அதன் பிரதிநிதி  மற்றும் தொல்லியல் ஆய்வுத் துறை மூத்த அதிகாரி ஆகியோர் முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட  வேண்டும் என்றும் நீதிபதிகள்  தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!