முக்கிய செய்திகள்

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 8 பேர் பலி

புதன்கிழமை, 13 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், ஜூலை 13 - பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் வஜ்ரிஸ்தான் பிராந்தியத்தில் தலிபான் மற்றும் அல் குவைதா தீவிரவாதிகள் பழங்குடியின மக்களோடு மக்களாக வசித்து வருகிறார்கள். இவர்கள் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கை எடுக்காததால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் ஆளில்லாத விமானங்கள் மூலம் தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று தெற்கு வஜ்ரிஸ்தான் பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதியில் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஒன்றில் 8 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வடக்கு வஜ்ரிஸ்தான் பகுதியில் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய 12 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. வடக்கு வஜ்ரிஸ்தானில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்காததால் அந்நாட்டுக்கு அளித்துவந்த ரூ. 9 ஆயிரம் கோடி நிதி உதவியை ரூ. 5 ஆயிரம் கோடியாக அமெரிக்கா குறைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: