முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் மோதல்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜூலை 16 - அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் விமான நிலையத்தில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்கு டெல்டா பிளைட் என்ற விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது வடக்கு கரோலினாவில் உள்ள ரலீக்-துர்ஹாம் என்ற நகருக்கு அட்லாண்டிக் சவுத்ஈஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற விமானமும் புறப்பட தயாராக இருந்தது. முதலில் அட்லாண்டிக் விமானம் புறப்பட்டுச் சென்றபோது அதன்மீது டெல்டா பிளைட் விமானம் மோதியது. அட்லாண்டிக் விமானத்தின் வால் பகுதி மீது டெல்டா விமானத்தின் இறக்கை மாட்டிக்கொண்டது.  இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மோதலின் காரணமாக பெண் பயணி ஒருவருக்கு கழுத்து பகுதியில் வலியேற்பட்டது. இதையடுத்து அவர் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எஞ்சியுள்ள பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மற்றபடி பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று பாஸ்டன் லோகான் சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.  இந்த மோதலை அடுத்து இந்த இரு விமானங்களிலும் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானங்களில் உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விமான மோதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: