முக்கிய செய்திகள்

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அமெரிக்காவாழ் இந்தியர்கள் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஆக.- 30 - லோக்பால் மசோதாவை ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் நிறைவேற்றும் திட்டத்தை வெளியிடும்படி பிரதமர் மன்மோகன் சிங்கை  அமெரிக்காவாழ் இந்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீது கட்சி வேறுபாடின்றி பெரும் ஆர்வத்துடன் விவாதம் நடந்தது. அதேவேகத்தில் அண்ணா ஹசாரே கேட்டுக்கொண்டபடி ஜன் லோக்பால் மற்றும் லோக்பால் மசோதாவை ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கள் நிறைவேற்றிவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டு வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகத்தில் அமெரிக்காவாழ் இந்தியர்கள் ஒரு கூட்டமாக வந்து  மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் லோக்பால் மசோதா குறித்து பாராளுமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் விவாதித்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளனர்.
வாஷிங்டன்னில் உள்ள காந்தி சிலை முன்பு அமெரிக்காவாழ் இந்தியர்கள் வெற்றிக்கூட்டத்தை நடத்தினர். இதில் குறிப்பாக வாஷிங்டன் அருகே உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த வெற்றிக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு காந்தி தொப்பிகளை புதுடெல்லியில் இருந்து கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். காந்தி அணிந்த தொப்பி மாதிரிதான் அண்ணா ஹசாரேவும் அணிந்திருந்தார். கூட்டத்தில் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஊழலை ஒழிக்க இந்தியாவில் அண்ணா ஹசாரே தலைமையில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் இந்தியாவுக்கு அண்ணா ஓரளவு நன்மை செய்துள்ளார். இது சுதந்திர இந்தியாவுக்கு பின்னர் பெரும் சாதனையாகும். அண்ணா ஹசாரேவுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் ஒருவரான ஜனக் அரோரா கூறினார். பாராளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா மீது விரைவில் விவாதம் நடந்து நாட்டிற்கு பெரும் வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டத்தை கொடுக்கலாம் என்று நம்புவதாக மாணவர் உமாங் அகர்வால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: