முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்தாதது ஏன்?

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,செப்.7 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் விசாரணை கூட நடத்தப்படாதது ஏன்? என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பி உள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறனுக்கு உள்ள பங்கு குறித்து மத்திய புலனாய்வு துறையால் நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்படவே இல்லை என்றும் பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று புதிய அபிடவிட் ஒன்றையும் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தயாநிதி மாறனிடம் விசாரணை கூட நடத்தப்படவில்லை. அல்லது அவரது பங்கு குறித்து அவர் கைது செய்யப்படவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ்குரூப் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததை இறுதி செய்த விவகாரத்தில் அவரிடம் விசாரணை கூட நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பிரசாந்த் பூஷன். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறனுக்குள்ள பங்கு குறித்து சி.பி.ஐ சில முக்கிய தகவல்களை மறைத்து விட்டது என்றும் பிரசாந்த் பூஷன் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ்குரூப் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததை இறுதி செய்யும் விவகாரத்தில் தயாநிதி மாறனுக்கு தொடர்பில்லை என்பது போல சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் சி.பி.ஐ. தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
மேலும் பா.ஜ.க. தலைவர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, ஜஸ்வந்த்சிங் ஆகியோர் தொலைத் தொடர்பு கொள்கையை மீறி விட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சி.பி.ஐ. கூறியிருந்தது நினைவிருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சி.பி.ஐ. நேர்மையான விசாரணை நடத்தவில்லை என்று குற்றம் சாட்டி பிரசாந்த் பூஷன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய அபிடவிட் ஒன்றை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!