முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் பந்த் போராட்டம்: பஸ் ஓடவில்லை

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

சித்தூர், அக்.18 - தெலுங்கானாவில் நேற்று தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்திருந்த பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரி கடந்த 13 ம் தேதிமுதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 15 ம் தேதிமுதல் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி 2 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை விஜயசாந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.  நேற்று நடைபெற இருந்த 3 வது நாள் ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு முதல் ரயில்கள் இயக்கப்பட்டன. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நேற்று ஒருநாள் பொது வேலை நிறுத்தத்திற்கு போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்தனர். இதையடுத்து ஐதராபாத் உள்ளிட்ட 10 தெலுங்கானா மாவட்டங்களில் பந்த் நடைபெற்றது. நேற்று காலை முதல் பெட்ரோல் பங்க்குகள், வங்கிகள், வணிக வளாகங்கள் மூடிக் கிடந்தன. ஏ.டி.எம். சென்டர்கள் கூட இயங்கவில்லை. வேலை நிறுத்தத்திற்கு தெலுங்கானா ஆட்டோ ஓட்டுனர் சங்கமும் ஆதரவு தெரிவித்திருந்ததால் ஆட்டோக்கள் முழுவதும் ஓடவில்லை. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், துணை ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சட்டப்பேரவை, கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு மற்றும் அமைச்சர்கள் வீடுகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

வேலை நிறுத்தத்தை ஒட்டி ஆந்திர தலைநகரான ஐதாராபாத்தின் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக தெலுங்கானா பகுதியில் உள்ள ஆசிரிய சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றுமுதல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதாகவும், ஆனால் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமலும், சம்பளம் பெற்றுக்கொள்ளாமலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பணி செய்ய இருப்பதாகவும் ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்