முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு பிரச்சினை: கேரளத்திற்கு வைகோ எச்சரிக்கை

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 31 - முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு பணியும் வரை தமிழகத்தில் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். பாசன பொறியியல் வல்லுனரான மறைந்த கோமதிநாயம் எழுதிய தாமிரவருணி, சமூக பொருளியல் மாற்றங்கள் என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நூலை வெளியிட்டு பேசியதாவது, 

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளம் அக்கிரமமாக செயல்படுகிறது. இரு மாநில மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையானதாகும். அணை விவகாரத்தில் வெள்ளைக்காரர்களோடு 999 ஆண்டுகளுக்கு தமிழகம் ஒப்பந்தம் செய்துள்ளது செல்லாது என்று கேரளத்தினர் சொல்கின்றனர். ஆனால் கேரள அரசு 1970 ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை கோமதிநாயகம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 999 ம் ஆண்டுகளுக்கு பிறகும் மேலும் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் உண்மையான ஒப்பந்தமாகும் என்பதையும் அவர் கூறியுள்ளார். 

கேரளத்துக்கு மீன் பிடிக்கும் உரிமையை தமிழகம் விட்டுக் கொடுத்திருக்க கூடாது. அது போல் அணையை பாதுகாக்கும் உரிமையையும் கேரளத்துக்கு தமிழக அரசு விட்டு கொடுத்திருக்க கூடாது. 2006 ம் ஆண்டு நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கேரள அரசு புரளியை கிளப்ப இருக்கிறது என்று மத்திய உளவுத் துறை மத்திய அரசை எச்சரித்தது. இதற்கு பிறகும் இதுவரை அணைக்கு மத்திய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. கேரள அமைச்சர் ஜோசப் அணையை உடைத்து அதில் உள்ள கற்களை கொண்டு சாலை அமைப்போம் என்கிறார். இதையெல்லாம் மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

இந்த விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் கொதிப்பு நிலையில் இருக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க மாட்டோம். புதிய அணை கட்ட மாட்டோம் என்று கேரளம் சொல்லும் வரை தமிழகத்தில் கொதிப்பு தணியாது. இவ்வாறு வைகோ பேசினார். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழ. நெடுமாறன் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை உடையும் என்றால் அதற்கு முன்பு கட்டப்பட்ட அணைகள் எல்லாம் உடையாமல் எப்படி இருக்கின்றன. சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை பற்றியே கருத்தில் கொண்டு வாழ்ந்தவர் கோமதிநாயகம் என்று புகழாரம் சூட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!