முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர்: மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      தமிழகம்
CM-1-2025-07-10

திருவாரூர், தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர் என்று திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி பேசினார்.

சகித்துக் கொள்ளாமல்... 

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் முதல்வர் ஸ்டாலின், நேற்று ரூ.846.47 கோடிக்கு 1234 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் , 2,423 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மத்திய ஆட்சியின் இடையூறுகளையும் சமாளித்து, திராவிட மாடல் தி.மு.க. அரசு செய்து வருகின்ற சாதனைகளை சகித்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு என்று பெயர் சொல்வதைக் கூட தவிர்த்துக் கொள்பவர்களுடன் அதி.மு.க.வை தற்போது சேர்த்துவிட்டார்.

அ.தி.மு.க.வையே மீட்க... 

அவர் தமிழகத்தை மீட்போம் எனக் கூறி ஒரு பயணத்தை தொடங்கி இருக்கிறார். முதலில் அ.தி.மு.க.வையே மீட்க முடியாதவர் . தமிழகத்தை மீட்க போகிறேன் என்கிறார். பழனிசாமி அவர்களே, தங்களிடமிருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது. கூவத்தூரில் ஏலம் எடுத்து, கலெக்ஷன், கரெப்சன், கமிஷன் என்றுகூறி தமிழகமே பார்க்காத அவலமான ஆட்சியை நடத்தினீர்கள். செய்த குற்றங்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டையும், தமிழர்களின் உரிமையையும் அடகு வைத்தீர்கள்.

துரோகம் செய்வதுதான்... 

நீங்கள் செய்தது ஒன்றா, இரண்டா அவற்றை எல்லாம் சரி செய்து, தமிழகத்தை இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்தைப் பெற்று, 9.69 சதவீதம் வளர்ச்சியை பெறச்செய்துள்ளோம். வெளிமாநில மக்கள் எல்லாம் தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாக பேசும் நிலையை உருவாக்கி இருக்கிறோம். இதெல்லாம் பழனிசாமிக்கு தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் துரோகம் செய்வது மட்டும்தான். உங்களைக் கொண்டு வந்தவர்களை துரோகம் செய்து வெளியில் அனுப்பினீர்கள். உங்களை நம்பி இருந்த கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கூட்டணி அமைத்தீர்கள். ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் துரோகம் செய்தீர்கள்.

நிதியை கொடுக்கவில்லை... 

மத்திய அரசு தமிழகத்துக்கு நிதியை கொடுப்பதில்லை. நாம் கொடுக்கின்ற ஜி.எஸ்.டி. வரிக்கான நிதியையும் கொடுப்பதில்லை. சிறப்பு திட்டங்கள் எதுவும் கொடுப்பதில்லை மத்திய அரசின் திட்டங்களுக்கே தமிழக அரசுதான் நிதி கொடுத்து வருகிறது. நமது தமிழக மாணவர்கள் படிப்பதற்கான நிதியை கொடுக்கவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் கல்வி நிதியை கொடுக்கும் நிலையில், தமிழகத்துக்கு மட்டும் அந்த நிதி கொடுப்பதில்லை. 

கூச்சமே இல்லாமல்... 

தமிழகத்தின் பெருமையை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர். அது மட்டுமா தொகுதி மறு வரையறை பிரச்சனை, வாக்காளர் பட்டியலில் குளறுபடி இப்படி தமிழகத்துக்கு எல்லா வகையிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கூச்சமே இல்லாமல் பயணிக்க முடிகிறது.

ஒரிஜினல் வாய்ஸாக...

இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் , கல்லூரிகள் கட்டக்கூடாது என்கிறார். முன்பெல்லாம் பா.ஜ.க.வுக்கு டப்பிங் வாய்ஸ் பேசிக் கொண்டிருந்தார். தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேசத் தொடங்கி விட்டார். அறநிலையத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்க சட்டம் உள்ளது. மறைந்த பக்தவச்சலம் தொடங்கி இந்த சட்டம் உள்ளது. எம்ஜிஆர் பழனியாண்டவர் கல்லூரியை தொடங்கி வைத்தார். அதே கல்லூரியில் கூடுதல் கட்டிடங்களை நீங்கள் கடந்த ஆட்சியில் சென்று திறந்து வைத்தீர்கள். நாங்கள் திறந்து வைத்தால் மட்டும் தவறா? பா.ஜ.க. தலைவர்களே இது போன்று கல்லூரி திறக்கக் கூடாது எனப் பேசுவதில்லை. ஆனால் பழனிசாமி பேசுவதை பார்த்து “கொடுத்த காசுக்கு மேல கூவுறான்” என்ற வடிவேலு பட வசனத்தை சொல்லி பழனிசாமியை கிண்டல் செய்கிறார்கள்.

அவ்வளவு கசக்கிறது.... 

இந்து சமய அறநிலையத்துறை சாதனைகள் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைவிட அதிக பட்டியல் கொண்டது. ஏன் உங்களுக்கெல்லாம் படிப்பு என்றால் அவ்வளவு கசக்கிறது. உங்களுக்கு படிப்பின் மேல் அவ்வளவு அக்கறை இருந்தால் கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க சட்டம் இயற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்து இரண்டு மாதம் ஆகிறது. இதுவரை அனுமதி தரவில்லை. நீங்கள் அனுமதி தந்தாலும் தராவிட்டாலும், நாங்கள் சட்டத்தின் வழியில் நின்று, கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்போம்.

ஓரணியில் தமிழ்நாடு... 

எனவே மக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசிக்கொண்டு, தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து நீங்கள் எந்த பயணம் செய்தாலும், மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனெனில் அதுதான் உங்களுடைய வரலாறு. தமிழகத்தை வஞ்சிக்கும் சக்திகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும் ஆனால், மக்களாகிய நீங்கள், ஓரணியில் தமிழ்நாடு என்று எங்கள் பக்கம் நிற்க வேண்டும். நம்முடைய மண், மொழி, மானம் காக்க என்றைக்கும் தி.மு.க.வும், நானும் துணை நிற்போம்.” என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து