முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக்கல்வி துறையை பாழடைந்த துறையாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனை- அன்புமணி

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      தமிழகம்
anbumani 2025-01-03

Source: provided

சென்னை : பள்ளிக்கல்வி துறையை பாழடைந்த துறையாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை என்றும் பள்ளிக்கல்வி துறையில் முதுகெலும்பான பணியிடங்களையே திமுக அரசு நிரப்பாமல் வைத்திருந்தது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் தான் எனும் நிலையில் அந்தப் பணியிடங்களையே திமுக அரசு நிரப்பாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பள்ளிக்கல்வித் துறையில் இயக்குனர், மண்டல இணை இயக்குனர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தான். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் பொதுக் கல்விக்கு ஒருவர், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ஒருவர் என இரு முதன்மைக் கல்வி அலுவலர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட கல்வி அலுவலர் பணியமர்த்தப்பட்டு இருப்பர்.

பள்ளிக்கல்வி நிர்வாகத்திற்கும், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுபவர்கள் அவர்கள் தான். அவர்கள் இல்லாவிட்டால் பள்ளிக்கல்வித் துறை செயல்படாமல் முடங்கி விடும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் இல்லாமல் பள்ளிக்கல்வித்துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், கரூர்.

கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர்ம் தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 24 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 76 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களில் இவை ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஆகும். அதேபோல், 23 மாவட்டங்களில் 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

ஜூன் மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும் போது அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் பணி இடங்களும், மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களும் நிரப்பப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.

இந்த அதிகாரிகள் எந்த தேதியில் ஓய்வு பெறப் போகிறார்கள் என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதாலும், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் தான் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதாலும் இவற்றை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அரசின் அலட்சியம் தான் இன்று நிலவும் அவலநிலைக்கு காரணமாகும்.

இப்போதும் கூட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலாளருக்கும் தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விரைவில் ஓய்வு பெறவிருப்பதால் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கும் போது அவற்றை நிரப்புவதற்கு தகுதியான மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அந்தப் பட்டியலைக் கூட தயாரிக்காமல் கல்வித் துறை உறங்கிக் கொண்டிருக்கிறது.

அனைத்து மாவட்டங்களிலும் அனைவருக்கும் கல்வித் திட்டப் பணிகள், இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்தான் செயல்படுத்த வேண்டும்.

மேலும் கல்விப் பணிகள் குறித்து முடிவெடுப்பதும், கற்றல், கற்பித்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்தப் பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் தான்.

அதுமட்டுமின்றி முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் போது மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதனால், ஏற்படும் காலியிடங்களை நிரப்ப பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கப்படும். ஆனால், அரசின் அலட்சியத்தால் அனைத்து நிலை பதவி உயர்வுகளும் தடைபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை; தமிழக அரசே ஒரு கணக்குப் போட்டு 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது; தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2500-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இத்தகைய சூழலில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. ஆசிரியர் நாளை கொண்டாடும் வேலையில் கல்வித்துறையின் அவலங்களை பேசுவது வேதனையளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வித்துறையை மேம்படுத்துவது இருக்கட்டும்... ஏற்கனவே இருந்த நிலை மேலும் சீரழியாமல் தடுப்பதற்குக் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன் விளைவு தான் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரே தீர்வு திமுக அரசை அகற்றுவது தான். அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து