முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் ரூ.1,003 கோடியில் புதிய ஆலை திறப்பு: மின்னணு பொருட்களின் தலைநகரம் தமிழ்நாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      தமிழகம்
CM-1 2025-12-05

Source: provided

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1,003 கோடி முதலீட்டில் புதிதாக 840 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகைியல் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

பல முன்னெடுப்புகள்...

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்றதில் இருந்து, அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சி என்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரூ.1,003 கோடியில்... 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், ரூ.1,003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச.5) தொடங்கி வைத்தார்.

500 நிறுவனங்களில்... 

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கார்னிங் நிறுவனத்தின் தொழில் திட்டத்தை, நம்முடைய தமிழ் மண்ணில் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தரம் வாய்ந்த அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கைக்கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட “கார்னிங் கொரில்லா” கிளாஸ் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனம், இந்தியாவில் கைபேசி உபபொருட்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

நவீன தொழில்நுட்பத்துடன்... 

பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், ரூ.1,003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் முன்-கவர் கண்ணாடி உற்பத்தி ஆலை அமைத்துள்ளது.

இன்னும் முதலீடுகளை... 

இந்நிறுவனங்கள் எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டில் முதலீடு செய்து, நம்முடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது உள்ளபடியே பெருமைக்குரிய ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது. இப்போது இவர்கள் இன்னும் அதிகம் முதலீடு வருவதற்கு உறுதி கொடுத்திருக்கிறார்கள். பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜீஸ் – கார்னிங் மற்றும் ஆப்டிமஸ் கூட்டு நிறுவனத்தின் இந்தத் திட்டம், இன்னும் வளர்ந்து, இன்னும் முதலீடுகளை கொண்டு வர வேண்டும். இன்னும் அதிகமான பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சேர்த்துக்கொள்ள... 

கார்னிங் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் நான் கேட்டுக்கொள்வது உலகத்தரம், அதிநவீன தொழில்நுட்பம், உயர் மதிப்பு ஆகியவற்றை உங்களின் குறிக்கோளாக நீங்கள் வைத்திருக்கிறீர்கள். அத்துடன் எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதையும், உங்களின் குறிக்கோளாக நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். சேர்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசு எந்தளவுக்கு வேகமாக செயல்பட்டு, முதலீடுகளை கொண்டு வருகிறது என்பதற்கு, ஒரு சாட்சியாக இந்த நிறுவனமே விளங்கிக் கொண்டிருக்கிறது.

கடுமையாக உழைக்க...

கடந்த ஆண்டு ஜனவரியில், இந்தத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டோம். ஜூன் மாதம் அடிக்கல் நாட்டினோம். அடுத்த பதினேழு மாதத்தில் இன்றைக்கு (நேற்று) இந்த நிறுவனம் உற்பத்தியை தொடங்கியிருக்கிறது. வளர வேண்டும் என்று விருப்பம் இருந்தால் மட்டும் வளர்ச்சியை அடைய முடியாது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்புதான், திராவிட மாடல். அதனால்தான், ஆயிரத்திற்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதில், 80 சதவிகிதம் திட்டங்களை பல்வேறு நிலைகளில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். இந்த வேகமும், வெளிப்படைத் தன்மையும் தான், உலக நிறுவனங்களுக்கு நாங்கள் சொல்லும் மெசேஜ்-ஆக அமைந்திருக்கிறது.

9 மடங்கு வளர்ச்சி...

பல உலக நிறுவனங்களுக்கு இந்த ட்ரஸ்ட் இருப்பதால்தான், கடந்த நான்கு ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ், ஜி.சி.சி மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் மகத்தான வளர்ச்சியை சாதித்திருக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் துறையில், 14.65 பில்லியன் டாலர் பொருட்கள் ஏற்றுமதியுடன் இந்தியாவிலேயே நம்பர்-1ஆக இருக்கிறோம். ஒட்டுமொத்த இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட்டில் நம்முடைய பங்கு 41 சதவிகிதம். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த துறையில் 9 மடங்கு வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். இது ஜஸ்ட் டேட்டா இல்லை; தமிழ்நாடுதான், எலக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகர் என்று அழுத்தமாக சொல்லும் உண்மை இது.

ரூ.440 கோடி முதலீடு...

இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, ரூ.440 கோடி முதலீட்டில், மத்திய அரசுடன் சேர்ந்து இந்த சிப்காட் பிள்ளைப்பாக்கத்தில், ‘மின்னணு தயாரிப்பு தொகுப்பு’ மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில், சூரிய ஒளி சார்ந்த ‘கதிரியக்க சோதனை மையம்‘ - மின்சாதனங்கள் சோதனை மையம் – மின்னணு சான்றிதழ் ஆய்வகம் – பிசிபி வடிவமைப்பு / விரைவான மாதிரி தயாரிப்பு மையம் – திறன் மேம்பாட்டு மையம் – தொழிலாளர் வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

மூன்றில் ஒரு பங்கு...

உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தியின் முக்கிய மையமாக நாம் இருக்க வேண்டும் என்று “மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி” திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். வடிவமை்பு முதல் – தயாரிப்பு வரைக்கும் முழு மதிப்புச் சங்கிலியையும் தமிழ்நாட்டில் கொண்டு வருவது போன்று இந்தத் திட்டம் இருக்கிறது. மத்திய அரசு இப்படியொரு திட்டத்தை அறிவித்ததுமே, நம்முடைய திராவிட மாடல் அரசுதான் முதன்முதலாக மாநிலத்திற்கான மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை அறிவித்தோம். இதன் ரிசல்ட் என்னவென்று கேட்டால், இந்தத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 24 விண்ணப்பங்களில் 8 விண்ணப்பங்கள், அதாவது, மூன்றில் ஒரு பங்கும் – 40 சதவிகிதம் அளவிலான முதலீடுகளும், தமிழ்நாட்டில்தான் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தொழில்களுக்கு உகந்த... 

அதுமட்டுமல்ல, செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்திக் கொண்டு வருகிறோம். அதற்காக, “தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன் 2030”-ஐ அறிவித்திருக்கிறோம். கடந்த ஆண்டு செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்ட் எலக்ட்ரானிக்ஸ் பாலிசியையும் அறிவித்திருக்கிறோம். இப்படி, தொலைநோக்குச் சிந்தனையுடன் ஒரு ரோடு மேப் போட்டு பாலிசிக்களை உருவாக்கி, தொழில்களுக்கு உகந்த சூழலை உருவாக்கியிருப்பதன் காரணத்தால் தான் முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டை நோக்கி ஆர்வமாக வருகிறார்கள்; நம்முடைய இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது.

தூத்துக்குடியில்...

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, சீரான வளர்ச்சியாக அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அப்படித்தான், ஒவ்வொரு திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் திட்டங்களை பொறுத்தவரைக்கும், காஞ்சிபுரம் – ஓசூர் – கோவை – திருச்சி – திருநெல்வேலி என்று அனைத்து பகுதிகளிலும் உலகளாவிய மின்னணுவியல் நிறுவனங்களின் திட்டங்கள் நிறுவப்பட்டிருக்கிறது. அடுத்து, தூத்துக்குடியில், ஒரு ‘மின்னணு உற்பத்தித் தொகுதி’-யை நிறுவ இருக்கிறோம். துறைமுக வசதியுடன் இருக்கும் அங்கும் உங்களின் வருங்கால திட்டங்களை நிறுவ முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு...

உற்பத்தியை தொடங்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அரசைப் பொறுத்தவரைக்கும், உங்களுக்கு முழு ஆதரவு நிச்சயமாக, உறுதியாக வழங்குவோம். எனவே, ஒளி தொடர்பியல் – டிஸ்பிளே கண்ணாடி – சூரிய ஒளி சிலிக்கான் தகடுகள் - மோட்டார் வாகன கண்ணாடி தொழில்நுட்பங்கள் போன்ற உங்களின் உயர்தர முதலீடுகளை, தமிழ்நாட்டிற்கு கொண்டு வாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் துறைகளில் உங்களின் நிபுணத்துவம், எங்களின் சூழலமைப்பு மற்றும் திறன்மிகு மனிதவளம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுவோம். தமிழ்நாட்டுடனான உங்கள் பார்ட்னர்ஷிப், தொடர்ந்து வலுப்பெற வேண்டும்; விரிவடைய வேண்டும்; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து