முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-1-2026-02-20

சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 8-வது கூட்டத்தொடர் நிறைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் தமிழ்நாட்டில் மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடர் நிறைவு...

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் (16-வது பேரவை) 8-வது கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று (20-2-2026) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசியதாவது: தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அவர்களே, 16-வது சட்டமன்றப் பேரவையின் எட்டாவது கூட்டத்தொடரின் நிறைவு நாளில் நாம் இங்கே ஒன்று கூடியுள்ளோம். கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஐந்து நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப் பெற்று, இந்த ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையும், வேளாண்மை இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது சிறப்பான விவாதம், பதிலுரை வழங்கப் பெற்றுள்ளது. 

மனநிறைவோடு... 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வும், சமூகநீதியும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இன உணர்வும், மாநில சுயாட்சிக் கொள்கையும் தமிழினத் தலைவர் கலைஞரின் சிறப்பான நிர்வாகமும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட திராவிட மாடல் அரசைக் கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடத்திக்காட்டி இருக்கிறோம் என்ற மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாகச் செய்தாகவே நான் நினைக்கிறேன். 

என்னுடைய தொகுதிகள்.... 

இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்கு இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து, எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் நான் செயலாற்றி இருக்கிறேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பைத் தந்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

சமச்சீரான வளர்ச்சியை... 

முந்தைய அரசுகளின் செயல்பாட்டின் காரணமாக விளைந்த மிக மோசமான பின்னடைவு; நமக்கு ஒத்துழைக்காத, ஓரவஞ்சனை செய்யக்கூடிய மத்திய அரசு இரண்டுக்கும் இடையில்தான் நாம் இருந்தோம். நமக்குப் பெரும் வெற்றியைத் தந்து பொறுப்பை ஒப்படைத்த மக்களின் எதிர்பார்ப்புக்கு இடையில் ஆட்சிக்கு வந்தோம். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தைப் போக்கி, சமச்சீரான வளர்ச்சியை இந்த 5 ஆண்டுகளில் அடைந்திருக்கின்றோம். திராவிட மாடல் அரசு தீட்டிய திட்டங்களை, இயற்றிய சட்டங்களை மக்களின் முன் வைத்துள்ளோம். நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம்.

எண்ணற்ற திட்டங்கள்... 

திராவிட மாடல் அரசால், இந்த 5 ஆண்டுகளில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் குடமுழுக்கு, குழந்தைகள் முதல் முதியோர் வரை, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என அனைத்துச் சமுதாயத்தினரும் வாழ்வில் உயர்வு கண்டிட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு...

இதற்கெல்லாம் நான் மட்டுமா காரணம்? இல்லை! இல்லவே இல்லை! ஒட்டுமொத்த தமிழர்களும் என் கையோடு கைசேர்த்து, எனக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் வழங்கி, பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பையும், வலிமையையும் தந்து எனக்கு உதவினார்கள். நான் இந்த ஐந்தாண்டு காலத்தில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கின்றேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கின்றேன். நாளைய தமிழ்நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சி, எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்.

ஆட்சி அமைப்போம்....

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக அமரவைத்து, தமிழ்நாட்டின் முதல்வராக உழைத்த நான், லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன். எவரேனும் விடுபட்டிருந்தால், அவர்களையும் இணைத்துக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து