முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொட்டு நீர்ப்பாசன கருவிகளை முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை இயங்கும்

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

 ‘சொட்டுநீர்ப்பாசனம் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனக்கருவிகளை அடிக்கடி கண்காணித்து பராமரிப்புப்பணிகளைச் செய்துவந்தால் , பத்து ஆண்டுகள் கூட நன்கு இயங்கும் “ – என்று நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்தார்.

நம்பியூரை அடுத்த குருமந்தூரில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற நுண்ணீர்ப் பாசனக்கருவிகள் பராமரித்தல் தொடர்பான விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.

‘விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளின் செயல்பாடும் , ஆயுளும் மின்மோட்டார் , பயிர் வகை , நிலத்தின் சரிவு , மண் தன்மை , தண்ணீரின் உப்புத்தன்மை  ஆகியனவற்றைப் பொறுத்து அமைகிறது. தண்ணீர் வெளியேறும் பகுதியில் உப்பு அல்லது பாசி படிந்திருந்தால் அமிலம் மற்றும் குளோரின் கரைசல்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பருவமழை பெய்தால் சொட்டுநீர்ப் பாசனத்தில் உள்ள தண்ணீரை முழுவதும் வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டும். பலத்த மழையின்போது குழாயில் மண் நுழைந்து அடைப்பு ஏற்படும் அடைப்பைத்தடுக்க மழை நின்றவுடன் 15 நிமிடங்கள் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தட்டு வடிகட்டிகள் தண்ணீரில் உள்ள மிக நுண்ணிய திடப்பொருள்கள் அகற்றுவதற்குப் பயன்படுகின்றன. இந்த வடிகட்டிகளில் உள்ள தட்டுகளை தினமும் தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்ய வேண்டும்.

தற்போது நம்பியூர் வட்டாரத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள அத்தனை சிறு மற்றும் இதர விவசாயிகளுக்கும் சொட்டுநீர்ப்பாசனம் , தெளிப்புநீர்ப் பாசனம் மற்றும் ரெயின் கன் எனப்படும் மழைத்தூவுவான் - ஆகியன 100 சத  மற்றும் 75 சத மானியத்தில் வழங்கப்பட்டுவருகிறது. மேலும் தற்போது பதிவு செய்யும் அத்தனை விவசாயிகளுக்கும் மானியத்தில் சொட்டுநீர் , தெளிப்புநீர்கருவிகள் அமைத்துத் தரப்படுகிறது. விவசாயிகள் வறட்சியான தருணத்தில் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” – என்றார்.

வேளாண்மைப்பொறியியல் துறை உதவிப்பொறியாளர் வெள்ளியங்கிரி , பயிற்சிக்கு வருகைதந்தோரை வரவேற்று , சொட்டுநீர்ப் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இதில் நம்பியூர் வட்டாரத்தைச் சேர்ந்த குருமந்தூர் , மலையப்பாளையம் , எலத்தூர் , சுண்டக்காம்பாளையம்; உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் வழங்கப்பட்டன.

மேலும் , ரெயின்கன் (மழைத்தூவுவான்) செயல்பாடு குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சொட்டுநீர்ப் பாசன பராமரிப்பு குறித்தான துண்டறிக்கைகள் , மானியத் திட்டங்கள் குறித்தான விளக்க அறிக்கைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
நிறைவாக அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கங்கா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!