சென்னை - கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா தி.மு.க.வின் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்படுகிறது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறுகையில், ''கன்னியாகுமரியில் ரூ.2600 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இனையம் வர்த்தக துறைமுக திட்டத்தால் மீனவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே மாணவர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக்கொண்டு வர வேண்டும், ஆடைகள் எப்படி அணிய வேண்டும், ஆபரணங்கள் அணியலாமா கூடாதா என எல்லா விதிமுறைகளையும் முன்கூட்டியே தெளிவாக அறிவிக்கப்பட்டதுதான். பல மாநிலங்களில் ஏராளமான தவறுகள் நடந்திருப்பதால் இந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தமிழக அரசியல் தலைவர்கள் நீட் தேர்வு நடக்காது என்று மாணவர்களை ஏமாற்றினார்கள். அவர்கள் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் அளவுக்கு மனநிலையை உருவாக்கவில்லை. கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா திமுகயின் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்படுகிறது. அது திமுக தலைவர் கருணாநிதிக்காக நடத்தப்படவில்லை'' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.