முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி நம்பியூர் வட்டாரத்தில் 7 ஆயிரத்து அய்நூறு ஏக்கர் பரப்பளவில் மானாவாரி மேம்பாட்டு சிறப்புத் திட்டம்

புதன்கிழமை, 24 மே 2017      வேளாண் பூமி
Image Unavailable

நம்பியூர் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கரிலும் , வரும் ஆண்டில் 5 ஆயிரம் ஏக்கரிலும் மானாவாரி நிலப்பகுதிகளில் பயிர் மகசூலை அதிகப்படுத்தும் விதத்தில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மானாவாரிப்பகுதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.

‘ மழையை மட்டுமே நம்பியுள்ள வானம் பார்த்த பூமியில் - மானாவாரி விவசாயத்தில் தானியங்கள் , பயறுவகைகள் , எண்ணெய்வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களின் சாகுபடியையும் , உற்பத்தியையும் அதிகரித்து , விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ‘நீடித்த மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்” என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2016-17 ம் ஆண்டு முதல் 2019- 20 ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் இதற்கு 802.90 கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு 2500 ஏக்கர் மானாவாரி சாகுபடி நிலங்கள். ஒன்று அல்லது இரண்டு கிராம ஊராட்சிகளைக் கொண்டு ஒரு தொகுப்பாக  (கிளஸ்டர்) ஒருங்கிணைக்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 25 லட்சம் ஏக்கரில் இந்த மாபெரும் திட்டம் செயலாக்கம் செய்யப்படவுள்ளது. நடப்பு ஆண்டில் 25 மாவட்டங்களில் 2500 ஏக்கரில் அமைத்த 200 தொகுப்புகள் 5 லட்சம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதில் தொகுப்பு மேம்பாட்டுக் குழுக்கள் ,வட்டாரக் குழுக்கள் , உழவர் மன்றக் குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டு , விவசாயிகள் ஆலோசனையின்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் ஒருபகுதியாக  நடப்பு ஆண்டில் நம்பியூர் ஒன்றியத்தில் வேமாண்டம்பாளையம் , அஞ்சானூர் ,இலாகம்பாளையம் , இருகாலூர் - ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கர் மானாவாரி நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு , இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் 5 கலப்பை கொண்ட டிராக்டரில் உழவு செய்யும் விவசாயிகளுக்கு , பின்னேற்பு மானியமாக  ஏக்கருக்கு 500 ரூபாய் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுகிறது. (படம் இணைப்பு) மேலும் விதைகள் , உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் 50 சத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விவசாய விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஆலோசனைகளும் , இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. கால்நடைப் பராமரிப்புத்துறை மூலமும் மானியம் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்துதல் , பயிர் உற்பத்தி செயல்விளக்கத்   திடல்கள் அமைத்தல் , பண்ணை இயந்திரங்கள் வாங்க மானியம் , பண்ணைக்குட்டைகள் , தடுப்பணைகள் அமைத்தல் , மினிகிட்டுகள் , தெளிப்புநீர்பாசனக் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இத்திட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளன. மானாவாரி விவசாயத்தில் மகசூல் குறைவாக உள்ளதாலும் , உணவுப் பயிர்களின் சாகுபடிப்பரப்பு அதிகரிக்கப்பட வேண்டியுள்ளதாலும் அதற்கேற்ப புதிய இரக விதைகள் , இடுபொருள்கள் , நவீன தொழில்நுட்பங்கள் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நம்பியூர் வட்டாரத்தில் இத்திட்டத்தின் அடுத்த பகுதியாக அடுத்த ஆண்டில் நிலக்கடலை சாகுபடி அதிகம் செய்யப்படும் இரண்டு கிராமங்களில் மேலும் 5 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதற்கான முன் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன “ - எனத் தெரிவித்தார்

இக்கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் ஜீவதயாளன்   , வேளாண்பொறியியல்துறை  உதவிப்பொறியாளர் வெள்ளியங்கிரி , கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன்  மற்றும் உழவர் குழுப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறினர். வேமாண்டம்பாளையம், இலாகம்பாளையம் , அஞ்சானூர் ,இருகாலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பவ்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

நிறைவாக குருமந்தூர் துணை வேளாண்மை அலுவலர் மாதவன் நன்றி கூறினார். நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்டப் பணியாளர்கள் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

கோபி சிவம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்