முக்கிய செய்திகள்

வெண்பன்றி வளர்ப்பில் தீவன மேலாண்மை

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      வேளாண் பூமி
white

Source: provided

வெண்பன்றிகள் சிறந்த தீவன மாற்றுத்திறன் கொண்டவைகளாகும். வெண்பன்றிகள் தாம் உட்கொள்ளும் ஒவ்வொரு 2½ - 3 கிலோ தீவனத்தையும் ஒரு கிலோ உடல் எடையாக மாற்றக்கூடியவைகளாகும். பன்றிகளின் வளர்ச்சியில்; தீவன மேலாண்மையானது மொத்த செலவினத்தில் 75 சதவிகிதம் பங்கு வகுக்கின்றது. ஆகையால் தீவனத்தை மினவும் சிக்கனமாக அதே சமயம் உற்பத்திக்கு தேவைப்படும் அளவு அளித்தல் அவசியமாகும்.

பன்றிகளின் உணவுப்பாதை ஒற்றை இரைப்பை உடையதாக உள்ளதால், மற்ற அசைபோடும் கால்நடைகளான மாடுகள், ஆடுகள் போல அதிக அளவு நார்த்;தீவனத்தை உண்ண முடியாது. எனினும், பன்றிகளின் தீவனத்தில் போதிய அளவு புரதமும், உயிர்ச்சத்துகளும் இருக்க வேண்டும். தீவன மேலாண்மை முறையில் வயது, பாலினம் மற்றும் உடற்செயலியலைக் கருத்தில் கொள்ள வேண்டும். தீவனத்தின் தன்மை மற்றும் தீவனம் அளிக்கும் முறைகளைப் பொறுத்துத் தீவன மாற்றுத்திறன் மற்றும் இறைச்சியின் தரம் ஆகியவை மாறுபடுகின்றன.

 பொதுவாக பன்றிகளின் உணவூட்டம் சமச்சீர் சரிவிதத்தில் அமைய வேண்டும். பன்றிகள் வேகமாக வளரக்கூடியதால் தீவனத்தில் உள்ள புரதம் மற்றும் அமினோ அமிலங்களின் அளவுகள் சரியான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பன்றிகளுக்குத் தேவையான எரிசக்தி, சாம்பல் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புகள் தீவனக் கலவையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பன்றிகளின் வளரும் பருவத்திற்கேற்ப தீவனப் பராமரிப்பு: குட்டிப் பன்றிகள்

பன்றி குட்டிகள் பிறந்த 7 முதல் 10 நாட்களுக்கு பிறகு அதாவது 2 கிலோ எடை முதல் 10 கிலோ எடை வரை உள்ள குட்டிகளுக்கு குட்டித்தீவனத்தை அளிக்கலாம்.  குட்டிகள் தாயிடமிருந்து பாலை அருந்திவிட்டு வந்த பிறகு குட்டித் தீவனம் மற்றும் குடி நீரையும் அளிக்க வேண்டும். ஒவ்வொரு குட்டியும் நாளொன்றுக்கு சராசரியாக 250 கிராம் முதல் 750 கிராம் வரை தீவனத்தை உண்ணும். குட்டித் தீவனமானது குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் வயது (56 நாட்கள்) வரை கொடுக்க வேண்டும். குட்டிப் பன்றிக்கான தீவனத்தில் அதிக அளவு புரதச்சத்தும் (22 – 23 சதவீதம்), வைட்டமின்களும் இருக்க வேண்டும். நார்சத்தை குட்டிகள் செரிமானம் செய்ய முடியாது என்பதால் பசுந்தீவனம் அளிக்கக்கூடாது. குட்டிகளை எளிதில் நோய் தாக்கும் என்பதால்; உணவுக்கூட கழிவுகளை உணவாக அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

வளரும் பன்றிகள்

 பன்றிகளின் எடை 10 முதல் 60 கிலோ இருக்கும் போது இத்தீவனம் கொடுக்க வேண்டும். பன்றிகுட்டிகளை தாயிடமிருந்து பிரித்த பின் அவற்றை சிறு குழுக்களாக வைத்து தீவனம் அளிக்கலாம். இந்த தீவனத்தில் 20 – 22 சதவீதம் புரதச் சத்து இருக்க வேண்டும். வளரும் பன்றி தீவனத்தை, சராசரியாக தினமும் 850 கிராம் முதல் 1600 கிராம் வரை கொடுக்க வேண்டும்.
 உணவுக்கூட கழிவுப் பொருட்கள், ரொட்டித் தொழிற்சாலைக் கழிவுகளை இவ்வயது பன்றிகளுக்கு முடிந்த அளவு கொடுத்து தீவனச் செலவை குறைக்க வேண்டும். சுமார் 10 கிலோ கழிவுப் பொருளுக்கு ஒரு கிலோ அடர் தீவனத்தை குறைத்துக் கொள்ளலாம். அதேபோல் வேலிமசால், மொச்சை, பெர்சீம், சுபாபுல் மற்றும் புல் வகைகள் பசுந்தீவனங்களை 3லிருந்து 5 கிலோ வரை அளித்து தீவனச் செலவை குறைத்துக் கொள்ளலாம்.

வளர்ந்த பன்றிகள்

 பன்றிகளின் எடை 60 கிலோவிற்கு மேல் இருக்கும் போது பன்றிகளின் தேவைக்கேற்ப இனவிருத்திக்கெனவும், விற்பனைக்கெனவும் குழுக்களாக பிரித்து தீவனம் அளிக்கலாம். இத்தீவனத்தில் புரதச்சத்து 16 சதவீதம் மற்றும் எரிசக்தி 3170 கிலோ கலோரிஃகிலோ அளவிற்கு இருக்குமாறு கலவை செய்து பன்றிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கொடுக்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும் நோக்கம் இருந்தால் புரதத்தின் அளவை குறைத்து தீவனக் கலவையை தயார் செய்து அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சுமார் 1750 கிராம் முதல் 2200 கிராம் வரை கொடுக்க வேண்டும். பசுந்தழைகளை 3 – 5 கிலோ வரை கொடுக்கலாம்.

இனப்பெருக்க பன்றிகள்

 ஆறு மாதம் முதல் 8 மாத வயதிலான, அதிக எடை கொண்ட (70 – 80 கிலோ கிராம்) பன்றிகளை தேர்வு செய்து தனி குழுவாக அமைத்து பராமரிக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட தீவனமுறையைக் கையாள வேண்டும். தீவனத்தில் கொழுப்பு சத்து குறைவாக இருக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு தீவனக் கலவையில்; புரதம் 12 சதவீதம் மற்றும் எரிசக்தி 3210 கிலோ கலோரிஃ கிலோ அளவிற்கு இருக்க வேண்டும். பசுந்தழைகளை 3 – 5 கிலோ வரை கொடுக்கலாம். தீவனத்தில் கொழுப்புச் சத்தின் அளவைக் குறைப்பதால் அவற்றின் இனப்பெருக்கத்திறன் அதிகரிப்பதுடன் குட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும், குட்டிகளை ஈனுதல் எளிதாகும். ஆண் பன்றிகளில் இனவிருத்தித் திறனும் அதிகரிக்கும்.

சினைப் பன்றிகள்

 சினைப்பன்றித் தீவனத்தை சரியான அளவு கொடுப்பதால் பன்றிகுட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆரோக்கியமான குட்டிகளாகவும் மற்றும் அதிக எடையுடனும் இருக்கும். சினைப்பன்றிகளுக்கு தினமும் சராசரியாக 2 முதல் 3 கிலோ வரை தீவனத்தை கொடுக்கலாம். தினமும் 0.25 கிலோ முதல் 0.3 கிலோ வரை எடை கூட்டினால் போதுமானது. சினைக்கால இறுதியில் பன்றிகள் குட்டிகள் ஈனும் போதும், ஈன்ற பிறகும் அதற்குத் தகுந்தாற் போல் தீவனத்தில் ஊட்டச்சத்திiனை அளிக்க வேண்டும். சினைப்பன்றிகள் குட்டி ஈனுவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னதாகவே தீவன அளவை குறைத்து விட வேண்டும். மேலும், தீவனம் எளிதில் செரிமானம் ஆவதுடன் அஜீரண கோளாறுகள் உண்டாகாதவாறு இருக்க வேண்டும். குட்டி ஈனும் தினத்தில் பன்றிகளுக்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டுமே கொடுக்க வேண்டும். தீவனத்தை கொடுக்க கூடாது. குட்டி போட்ட அடுத்த நாள் 1 முதல் 1.5 கிலோ வரை தவிடு கலந்த தீவனத்தை கொடுக்க வேண்டும். பன்றி குட்டிகளின் வளர்ச்சி அதன் தாய்பன்றிக்குக் கொடுக்கப்படும் தீவனத்தின் செறிவு மற்றும் தரம், குட்டிகளின் எண்ணிக்கை மற்றும் தாய்பாலின் அளவு போன்றவற்றை பொறுத்தே அமையும். எனவே, குட்டிகள் ஈன்ற முதல் வாரத்திலிருந்து தீவன அளவை அதிகப்படுத்தி முழுத்தீவனம் அளித்திடல் வேண்டும்.

 பால் கொடுக்கும் பன்றிகளின் தீவனக் கலவையானது 13 சதவீதம் புரதம் மற்றும் 3210 கிலோ கலோரி எரிசக்தி கொண்டவையாக இருக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு 2-3 கிலோ தீவனமாவது உடல் பராமரிப்புக்கும், 0.2 முதல் 0.5 கிலோ தீவனம் குட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சேர்த்து கொடுக்க வேண்டும். தீவனக் கலவையானது சரியான விகிதத்தில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் கொண்டவையாக இருக்க வேண்டும். மேலும் பசுந்தழைகளை 3-5 கிலோ வரை கொடுக்கலாம்.  

வெண்பன்றிகளுக்கு அடர் தீவனம் அளித்தல்

பன்றிகளுக்கான அடர் தீவனத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், அரிசி, கோதுமை, மரவள்ளிக்கிழங்கு போன்றவையும் புரதம் அதிகமுள்ள சோயா புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, மீன்தூள் மற்றும் கோதுமைஃஅரிசி தவிடு ஆகியவையும் உயிர்சத்து, தாது உப்புகளும் உரிய விகிதத்தில் இருக்க வேண்டும். பன்றிகள் பராமரிப்பில் தீவனத்திற்கான செலவைக் கட்டுப்படுத்த பண்ணையாளர்கள் சொந்தமாக எளிய முறையில் அடர்தீவனத்தை தயாரித்துக் கொள்ளலாம்.

பன்றிகளுக்கு அடர்தீவனக் கலவை தயாரிப்பதற்கான முறைகள்

வ.எண் உணவுப் பொருட்கள் குட்டிகளுக்கான தீவனம் (மூ)

(14 வது நாள் முதல் 56 வது நாள் வரை) வளரும் பன்றிகள் (மூ) 

(60 கிலோ வரை வளர்ந்த பன்றிகள் (மூ)

(60 முதல் 110 கிலோ வரை சினைப் பன்றி மற்றம் பால் கொடுக்கும் பன்றிகள் (மூ)

1 தானிய வகைகள் : (சேளம், மக்காச்சோளம், கம்பு, உடைந்த கோதுமைஃஅரிசி) 65 50 50 50

2 புpண்ணாக்கு வகைகள்  : (கடலைஃசோயாஃஎள்) 14 18 20 20

3 வெல்லக் கழிவு 5 5 5 5

4 தவிடு வகைகள் :  (கோதுமை தவிடுஃஅரிசி தவிடு) 1 15 25 18

5 மீன் தூள்  5 5 5 5

6 தாது உப்பு கலவை  1 1.5 1.5 1.5

7 சமையல் உப்பு  - 0.5 0.5 0.5
  
இத்துடன் கூடுதலாக ஏ பி டி வைட்டமின் கலவை 100 கிலோவிற்கு 10 கிராம் வீதமும், 100 கிலோ தீவனத்தில் 1.2 கிராம் எதிருயிரி மருந்து இருக்கும்படி தேவையான அளவில் சேர்க்க வேண்டும். பொதுவாக தீவனத்தின் தரமானது, ஒவ்வொரு மாதத்திலும் பன்றி 10 கிலோ எடை கூடும் அளவு இருக்க வேண்டும்.

அடர் தீவனம் அளிக்க வேண்டிய அளவு (ஒரு நாளைக்கு) வளர்ந்த ஆண் மற்றும் பெண் பன்றி - 2.5 கிலோ

சினைப் பன்றிகள்   - 3.0 கிலோ

பால் ஊட்டும் பன்றிகள்  - 3.5 கிலோ

தீவன முறை

• பன்றிகளுக்கு எப்போதும் வேண்டிய அளவிற்கு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்யவது மிக முக்கியம்.

• பண்ணையில் ஒரு குறிப்பிட்ட தீவன முறையை மட்டுமே தினசரி கடைபிடிக்க வேண்டும். தீவனங்களை திடீரென்று மாற்றுவது நல்லதல்ல. தீவனமிடும் நேரமும் தினந்தோறும் ஒரே நேரமாக இருந்தால் நல்லது.

• தீவனமானது சரியான அளவிற்கு தேவையான எரிசக்தி, புரதம், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை வளரும் பருவத்திற்கேற்ப கொண்டிருக்க வேண்டும்.

• சமயலறை கழிவு அல்லது உணவு விடுதியில் மீதமான உணவுப் பொருட்களைப் பன்றிகளுக்கு கொடுக்கலாம். இவற்றில் எரிசக்தி அதிகமாக இருப்பதோடு தீவனச் செலவும் குறையும்.

• தீவனக் கலவையில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தேவைக்கேற்ப கலந்து கொடுக்கலாம்.

பெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பன்றிகளுக்கு முறையான தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பன்றிகளில் வளர்ச்சி குறைவும், அதிகமான குட்டிகள் இறப்பும் ஏற்படுகிறது.  இந்நிலையை போக்கவும், இலாபகரமாக பண்ணையை நடத்தவும் மேற்குறிப்பிட்டுள்ளவாறு தீவனமுறையை கையாளுவது அவசியம்.

மேலும் தொடர்புக்கு: கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625. தொகுப்பு: மு.வீரசெல்வம், சோ.யோகேஷ்பிரியா,  கோ.ஜெயலட்சுமி, மா.வெங்கடேசன், ம.சிவகுமார் மற்றும் ப.செல்வராஜ்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து