அகமதாபாத், குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் சாலை வழியாக வாகனத்தில் சென்று ஆதரவு திரட்ட காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு காரணம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், மேலும் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் எழும் சூழல் உள்ளதாகவும் காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளா்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு வரும் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.கவுக்கும், எதிர்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இருகட்சியினரும் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 12-ம் தேதி மாலையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் அகமதாபாத் நகரில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக குஜாரத் காவல்துறையினரிடம் இருகட்சிகள் சார்பில் அனுமதியும் கோரப்பட்டது. ஆனால் அனுமதி வழங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.
இது குறித்து அகமதாபாத் நகர காவல்துறை ஆணையர் ஏ.கே சிங் கூறியதாவது, பிரதமர் மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் சாலை வழியாக வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்வதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை எழ வாய்ப்புள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் சிக்கல் உள்ளது. எனவே இரு தலைவர்களுக்கு சாலை வழி பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.