முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம்

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆடு வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் பெறும் நிலை பெருமளவில் நிலவுகிறது. சிறு பண்ணையாளர்கள் வளர்ப்பு மாடுகளில் நோய் தாக்கம் ஏற்படும் போது நவீன மருத்துவ முறைகள் மற்றும் மருந்து பொருட்களால் அவர்களுக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது.

கால்நடை வளர்ப்போர் தாங்களாகவே ஆண்டிபயாடிக் எனப்படும் எதிருயிரி மருந்துகளை பயன்படுத்துவதால் உயிர் கொல்லி எதிர்ப்பை உண்டாக்கும். அதாவது மருந்துகள் நோய் எதிர்ப்பு தன்மையை இழந்து விடுகின்றன. உணவு பயன்பாட்டிற்காக பராமரிக்கப்படும் கால்நடைகளில் உபயோகப்படுத்தப்படும் ஒவ்வொரு மருந்திற்கும் வித்டிராயல் பிரீயட் எனப்படும் விலக்கு காலம் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.

அதாவது கடைசியாக மருந்து உட்செலுத்திய பின் குறிப்பிட்ட கால அளவிற்கு கால்நடைகளிலிருந்து பெறப்படும் உணவு பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் இவற்றில் உள்ள மருந்துப் பொருட்களின் எச்சம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தால் பரிந்துரைக்கப்படும் மரபுசார் மூலிகை மருத்துவ முறைகள் சிறு பண்ணையாளர்களுக்கு எளிய, அதிக பொருட் செலவில்லாத மருத்துவ முறையாக அமைவதுடன் மருத்துவப் பொருட்களின் எச்சங்கள் இல்லாத இறைச்சி உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. குடற்புழு நீக்கம் வளர்ந்த ஆடுகளுக்கு 2 அங்குல நீல சோற்றுக் கற்றாழையின் முள்ளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

வயிறு உப்புசம்

வெற்றிலை - 3, தரமான மிளகு - 10, பெருங்காயம் - 5 கிராம், இஞ்சி - 50 கிராம், சீரகம் அரை தேக்கரண்டி ஆகியவற்றை நன்றாக அரைத்து நாட்டு சர்க்கரை 50 கிராம் சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.

சளித் தொல்லை

துளசி, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி, ஆடுதொடா, தூதுவளை தலா இரு இலை, மஞ்சள், மிளகு, சீரகம் தலா ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை அரைத்து அதோட 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.

கழிச்சல்

சின்ன சீரகம், கசகசா, வெந்தயம் தலா 10 கிராம், மிளகு - 5 எண்ணிக்கை, மஞ்சள் தூள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து நீர் தெளித்து இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 பல் வெங்காயம், 2 பல் பூண்டு, 10 கறிவேப்பிலை மற்றும் 100 கிராம் கருப்பட்டியுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தடவி உட் செலுத்த வேண்டும். இது நான்கு ஆடுகளுக்குத் தேவையான மருந்து.

பேன், உண்ணி

50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நசுக்கி அதோடு நான்கு ஓமவல்லி இலை, தலா ஒரு கைப்பிடி தும்பை, வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து ஆட்டின் மேல் பூசி காயவிட வேண்டும். பிறகு தேங்காய் நாரால் தேய்த்து கழுவிவிட வேண்டும். மழைக்காலம்இ ஈரமான சூழ்நிலைகளில் இதனை தவிர்க்க வேண்டும்.

குளம்பு புண்

கால் குளம்பினை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரினால் நன்கு கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும். பின்னர் தலா ஒரு கைப்பிடி துளசி மற்றும் குப்பைமேனி இலை, 4 பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள் தூள் ஆகிய பொருட்களை அரைத்து 100 மி.லி நல்லெண்ணெயில் வதக்கி ஆறியவுடன் குளம்பில் தடவவும்.

ஆட்டுக்கொல்லி நோய்

சீரகம், வெந்தயம், தலா 10 கிராம், மிளகு 5 எண்ணம் ஆகியவற்றை இடித்து மஞ்சள் தூள் 10 கிராம், பிரண்டை 5 கொழுந்து, பூண்டு 5 பல், முருங்கை இலை ஒரு கைப்பிடி 500 கிராம் கருப்பட்டி ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக நாக்கின் மேல் தேய்த்து கொடுக்க வேண்டும். இதனை நாளொன்றுக்கு மூன்று முறை அளிக்க வேண்டும்.

ஆட்டமை வாய்வழி மருந்து

சீரகம், வெந்தயம், மிளகு தலா 5 கிராம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து ஐந்து கிராம் மஞ்சள்தூள், இரண்டு பல் பூண்டு, தலா ஒரு கைப்பிடி வேப்பிலை, முருங்கை, துளசி திருநீற்றுப்பச்சிலை இலை மற்றும் நிலவேம்பு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தேய்த்து உட்செலுத்த வேண்டும்.

வெளிபூச்சு மருந்து

மேற்கூறிய மருந்து பொருட்களுடன் தலா ஒரு கைப்பிடி குப்பைமேனி, தும்பை சேர்த்து அரைத்து தலா 100 மி.லி விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆறியவுடன் அம்மை கொப்பளம் உள்ள இடங்களில் தடவ வேண்டும்.

கோமாரி

தலா ஒரு தேக்கரண்டி மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து அதோடு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு பல் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். அரை மூடி தேங்காயைத் துருவி அரைத்து கலவையோடு சேர்த்து 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட கொடுக்க வேண்டும். இது 5 ஆடுகளுக்கான அளவு. நோய் தாக்கம் உள்ள போது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.

மூலிகை மருத்துவம் மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

பயன்படுத்தும் தாவரம் நச்சுத் தன்மை இல்லாதவை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மருந்துகளை புகட்டும் போது பனைவெல்லம் சேர்த்து பிசைந்து நாக்கின் மேல் சிறிது சிறிதாக தடவி உள்ளே புகட்ட வேண்டும். கால்நடைகளின் இருப்பிடத்தை (கட்டுத்தரை) சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை கட்டுத்தரையில் வசம்பு, மஞ்சள், பூண்டு ஊற வைத்து சுண்ணாம்பு நீர் கலந்து தெளித்து விட வேண்டும். கால்நடைகளுக்கு ஏற்ற எளிய முதலுதவி மூலிகை செடிகளை வீட்டில் வளர்த்து கால்நடைகளுக்கு எளிய மருத்துவ உதவி கிடைக்க செய்வோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து