முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      அரசியல்
Image Unavailable

தேனி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர் போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் இறுதி கட்ட பிரச்சாரமாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இப்பிரச்சாரத்தின் போது தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது,
மத்தியில் தி.மு.க. -  காங்கிரஸ் கூட்டணி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தது. ஆனால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பதற்காக தமிழக மக்கள் பல லட்சம் பேர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய போது பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நான் முதலமைச்சராக இருந்த போது வேண்டுகோள் விடுத்தேன். இதனையடுத்து உடனடியாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஒரே நாளில் நான்கு துறைகளிலும் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மூல காரணமாய் இருந்தவர் நரேந்திர மோடி.

மேலும் தமிழகத்தில்  தாய்மார்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அம்மா செய்திருந்தார். அவர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைப்பதற்காக இலவச மிக்சி கிரைண்டர் மின் விசிறி போன்ற அனைத்து பொருட்களும் தமிழக அரசால் 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா  இருந்த போது பொங்கலுக்கு அனைவரும் சர்க்கரை பொங்கல் வைத்து சாப்பிடும் விதமாக பச்சரிசி வெல்லம் போன்றவை வழங்கப்பட்டது தற்போது அவற்றுடன் சேர்த்து மக்கள் அனைவரும் சந்தோசமாக பொங்கல் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அம்மா இருந்த பொழுது கொண்டு வந்த எந்த திட்டத்தையும்  குறைக்கவில்லை, விரிவுபடுத்தப்பட்டுதான் வருகிறது.  மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் மக்களுக்கு தமிழக அரசால் 2000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்க முன் வருவதற்குள் தி.மு.க.வினர் அதனை தடுக்கும் விதமாக நீதிமன்றம் சென்று நிறுத்தி விட்டனர். உறுதியாக தேர்தல் முடிந்தவுடன் நீதிமன்றத்தில் இருக்கும் தடையை விலக்கி ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும்.  மேலும் நாங்கள் சரிவர வேலை செய்கிறோமா என்று மேலிருந்து எங்களை அம்மா கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் நாங்கள் பயந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை ஸ்டாலின் இந்தத் தேர்தலுடன் அ.தி.மு.க. காணாமல் போய் விடும் என்று பேசி வருகிறார். 1972-ல் எம்ஜிஆர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு வந்த வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் தாங்கி இன்று ஒன்றரை கோடிக்கு மேல் தூய தொண்டர்களை கொண்ட இயக்கமாக உள்ளது. எந்த ஒரு கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அம்மா உருவாக்கி வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்டாலின் கூறுகிறார், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தமிழ்நாட்டையே தீ வைத்துக் கொளுத்தி விடுவார்கள் என்கிறார். அதற்கு நாங்கள் என்ன தீப்பந்தத்துடனா அலைந்து கொண்டிருக்கிறோம். மாமன், மச்சான் சண்டையில் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தி 3 பேர் இறந்ததற்கு தி.மு.க. வே காரணம். அதற்கு தீர்ப்பு காலம் தாழ்த்தி வந்தாலும் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். இன்றைக்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சி தான். ஆனால் வன்முறையை   கைவிடவில்லை.

சென்னையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு அந்தக் கட்சியினர் பணம் கொடுப்பதில்லை. தற்போது பணம் கொடுத்தால் மட்டும் தான் அவர்களை உள்ளே நுழைய விடும் அவலம் அந்த கட்சியினருக்கு தற்போது நிகழ்ந்து வருகிறது. எதிர்க்கட்சியில் இருக்கும் போதே இந்த ஒரு நிலை என்றால் ஆளுங்கட்சியாக அவர்கள் வந்தால் தமிழ்நாட்டை என்ன பாடு படுத்துவார்கள். மேலும் இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் மூவாயிரத்திலிருந்து 4000 பேர் வரை ஹஜ் பயணத்திற்கு மாநில நிதியிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசலம் செல்வதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இப்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல பல திட்டங்களை வழங்கி வருவது இந்த அரசுதான். ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாருக்கு தங்களது வாக்குகளை வழங்க வேண்டும். உங்களுக்காக அவர் உழைத்திடுவார். இந்த இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மற்றும் நகர செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து