உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      தமிழகம்
Sellur Raju 2020 01 24

Source: provided

மதுரை :  உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை கூறினார். 

மதுரை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுக கூட்டம், தமிழ்நாடு ஓட்டலில் நடந்தது. கலெக்டர் வினய், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர் செல்லூர் ராஜூ குத்துவிளக்கேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக எம்.ஜி.ஆர். மாற்றினார். ஜெயலலிதா ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என உறுதி பூண்டார். அவரது கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நனவாக்கி வருகின்றனர். இந்த திட்டத்தில் கருணாநிதிக்கும் பங்கு இருக்கிறது. நான் எதையும் மறைத்து பேச மாட்டேன். 

நானும் ஒரு காலத்தில் உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்தவன்தான். மாநகராட்சி கவுன்சிலராக இருந்தபோது அதிகாலை 4 மணிக்கு எனது ஸ்கூட்டரில் வார்டு முழுவதும் வலம் வருவேன். குடிநீர் பிரச்சினையை தீர்க்க தெருத் தெருவாக செல்வேன். அப்போது பெண்கள், “என்ன ராசு இத்தனை மணிக்கே வந்துட்ட” என்று கேட்பார்கள். அந்த பெண்களின் ஆதரவு தான் என்னை இன்று ஒரு அமைச்சராக உயர்த்தி இருக் கிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் முதல்-அமைச்சராக கூட வரலாம். இப்போது இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட ஒரு சாதாரண விவசாயி தான். நாட்டின் பிரதமருக்கு இல்லாத அதிகாரம் கூட ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது. அதனை புரிந்து கொண்டு மக்கள் பணியாற்றுங்கள். இந்த அரசு உங்களுக்கு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள், “பெரியார் பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறுகிறாரே” என்று கேட்டனர். அதற்கு அவர், “ரஜினி எப்போதும் நிதானமாக பேசுபவர். ஆனால் இந்த விஷயத்தில் அவரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். பெரியார் என்பவர் வெறும் கடவுள் மறுப்பாளர் என்று சொல்வது தவறு. தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்புக்காக அவர் ஆற்றிய பங்கினை யாரும் மறுக்க முடியாது. ரஜினி தனது மகளுக்கு 2-வது திருமணம் நடத்துகிறார் என்றால், அதற்கு பெரியாரின் கொள்கைகள் தான் காரணம்” என்றார். 

தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறும்போது, “அ.தி.மு.க.வில் அனைவரும் முதல்-அமைச்சர்கள் தான் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். உடனே துரைமுருகன் அப்படியென்றால் துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டு கொடுப்பீர்களா? என்று கேட்கிறார்.  

அ.தி.மு.க.வை பற்றி பேச துரைமுருகனுக்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை. கட்சியின் மூத்த உறுப்பினரான துரைமுருகன் தான் தி.மு.க. தலைவர் ஆகி இருக்க வேண்டும். ஆனால் ஆக முடிந்ததா?. என்றும் ஆக முடியாது. சட்டசபையில் அதிகம் பேசுபவர் அவர் தான். அவருக்கு சட்டமன்ற தலைவர் பதவி கூட தி.மு.க.வில் தரவில்லை. அவர் முதலில் ஸ்டாலினிடம் போய் தலைவர் பதவியை கேட்க வேண்டும். உண்மையான திராவிடம் அண்ணாவின் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறது. தி.மு.க. ஒரு கட்சியல்ல. அது ஒரு குடும்ப கம்பெனி தான்” என்றார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து